உ.பி. மாடலில் ராஜஸ்தானில் சாமியாரை களமிறக்க பா.ஜனதா திட்டம்
- கடந்த தேர்தலை விட அதிகமாக 47 இடங்களில் பா.ஜனதா முன்னிலைப் பெற்றுள்ளது.
- வசுந்தரா ராஜே சிந்தியா முதலமைச்சர் போட்டியில் இருக்கிறார்.
4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ராஜஸ்தானில் மாறிமாறிதான் தேர்தல் முடிவு இருந்துள்ளது. கடந்த முறை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால், இந்த முறை பா.ஜனதா வெற்றி பெறும் எனக் கூறப்பட்டது.
பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் தெரிவித்தன. என்றாலும், மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நாங்கள் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என அசோக் கெலாட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்கள்.
ஆனால், தேர்தல் முடிவு பா.ஜனதாவுக்கு ஆதரவாக அமைந்துள்ளது. 199 தொகுதிகளில் பா.ஜனதா 112 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால் பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க இருக்கிறது.
ராஜஸ்தானில் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தாமல் பா.ஜனதா தேர்தலை சந்தித்தது. இதனால் முதலமைச்சர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த முறை முதலமைச்சராக இருந்த வசுந்தரா ராஜே சிந்தியாவை பா.ஜனதா ஓரங்கட்டுகிறது என தேர்தல் பிசாரத்தின்போது தெரிவிக்கப்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில் பிரதமர் மோடியின் தொடக்கக்கால பிரசாரத்தில் வசுந்தரா ராஜே சிந்தியா கலந்து கொள்ளவில்லை. கடைசி கட்டத்தில் பிரமதர் மோடியுடன் ஒரு மேடையில் தோன்றினார். இதனால் வசுந்தரா ராஜே சிந்தியா மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்க வாய்ப்புள்ளது. இவர் ஜல்ராபதான் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
அதேநேரத்தில் பா.ஜனதா எம்.பி.யான தியா குமாரிக்கு வித்யாநகர் தொகுதியில் போட்டியிட கட்சி மேலிடம் வாய்ப்பு வழங்கியது. இவரும் அதிக வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தும் தேர்தல் களத்தில் உள்ளார். இவர்கள் மூன்று பேரில் வசுந்தரா ராஜே, கஜேந்திர சிங் ஷெகாவத் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே சாமியாரும், அல்வார் தொகுதி எம்.பி.யுமான மஹந்த் பாலக்நாத் ராஜஸ்தான் முதலமைச்சர் பதவிக்கு முன்னணி போட்டியாளராக இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
திஜாரா தொகுதியில் போட்டியிடும் பாலக்நாத் காங்கிரஸ் வேட்பாளரை விட மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலைப் பெற்றுள்ளார்.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன் 40 வயதான பாலக்நாத் சிவன் கோவில் சென்று தரிசனம் மேற்கொண்டார். அப்போது, பா.ஜனதா 120 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் எனத் தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளான நேற்று பாலக்நாத், அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷை நேற்று பா.ஜனதா தலைமைக்கழகத்தில் சந்தித்துள்ளார். அவரிடம் சந்தோஷ் உடனான சந்திப்பு குறித்து கேட்டபோது, இது தனிப்பட்ட சந்திப்பு என முடித்துக் கொண்டார்.
மேலும், முதலமைச்சர் பதவியை பொறுத்தவரையில் பா.ஜனதாவின் முகம் பிரதமர் மோடி. அவரது தலைமையின் கீழ் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். முதலமைச்சர் யார் என்பதை கட்சி முடிவு செய்யும். எம்.பி.யாக மக்களுக்கு சேவை புரிய விரும்புகிறேன். அதனால் நான் திருப்தி அடைந்துள்ளேன்" என்றார்.
உத்தர பிரதேசத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் யோகி ஆதித்தயநாத்தை பா.ஜனதா முதலமைச்சராக்கியது. அதற்கு முன் அவர் எம்.பி.யாகத்தான் இருந்தார். யோகி ஆதித்யநாத் நாத் சமூகத்தை சேர்ந்தவர். பாலக்நாத்தும் நாத் சமூகத்தை சேர்ந்தவர். அல்வாரில் அவருக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது.
6 வயதிலேயே சன்னியாசியாக சென்றார். அவரது குடும்பத்தினர் அவரை துறவியாக்க வேண்டும் என முடிவு செய்தனர். அதன்படி துறவியானார்.