பெண்ணின் கன்னத்தில் அறைந்த பாஜக அமைச்சர்....முன்னாள் முதலமைச்சர் கடும் கண்டனம்
- பெண்ணின் கண்ணத்தில் அமைச்சர் அறையும் வீடியோ சமூக வளைதளத்தில் வைரலானது.
- பாஜக அமைச்சரை பதவி நீக்கம் செய்ய கர்நாடகா காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்
சாம்ராஜ்நகர்:
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஹங்கலா கிராமத்தில் அரசு நிலத்தில் வீடு கட்டி வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கர்நாடக வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணா கலந்து கொண்டு, அந்த பகுதி மக்களுக்கு நில உரிமை பட்டாக்களை வழங்கினார்.
அப்போது அங்கு திரண்டிருந்த கூட்டத்தினர் மத்தியில் நெரிசல் ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பெண் ஒருவர் தள்ளப்பட்டதால் அவர் அமைச்சர் மீது விழுவது போல் சென்றுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் கன்னத்தில் அமைச்சர் சோமண்ணா அறையும் வீடியோ காட்சி சமூக வளைதளத்தில் வெளியாகி வைரலானது.
அமைச்சரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அவரை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என்று கர்நாடகா காங்கிரஸ் கட்சி, வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில் குடகு மாவட்டம் மடிகேரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அம்மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் சோமண்ணா பெண்ணை அறைந்தது அவரது மனிதாபிமானமற்ற செயலை காட்டுகிறது என்று கூறியுள்ளார். பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையில் பாஜக அதிக ஆர்வம் காட்டி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.