அம்பேத்கரை காங்கிரஸ் அவமதித்ததாக பாஜக எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம்
- அமைச்சர் பதவியை அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சியினர் போராட்டம்.
- அம்பேத்கரை அவமரியாதை செய்து காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய பாவம் செய்துள்ளது.
கடந்த 17 ஆம் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.
இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து பாராளுமன்றத்திற்கு வெளியே அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தி அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஜெய் பீம் என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைகள் நேற்று முழுவதும் முடங்கின.
பின்னர் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமித் ஷா , பா.ஜ.க. ஒருபோதும் அம்பேத்கரை அவமதிக்காது. * அம்பேத்கரின் கொள்கைகளை பா.ஜ.க. பின்பற்றி வருகிறது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கருத்துக்களை திரித்து கூறிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. AI மூலம் எனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அமைச்சர் பதவியை அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்ததாக பாஜக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில், 'அம்பேத்கரை அவமதிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது'. 'அம்பேத்கர் நமக்கு வழிகாட்டினார். காங்கிரஸ் நம்மை தவறாக வழிநடத்தியது' போன்ற கோஷங்களை பாஜக எம்.பி.க்கள் எழுப்பினர்.
போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், "'காந்தி' குடும்பத்தில் அனைவருக்கும் பாரத ரத்னா வழங்கினார்கள். ஆனால் அம்பேத்கருக்கு காங்கிரஸ் கட்சி பாரத ரத்னா கொடுக்கவில்லை. அம்பேத்கரை அவமரியாதை செய்து காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய பாவம் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி 24 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து தங்கள் பாவங்களுக்கு பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.