ஐஸ்வர்யா ராய்-ஐ தொடர்ந்து இழிவுபடுத்துகிறார்: ராகுல் காந்தி மீது பா.ஜனதா கடும் விமர்சனம்
- பாலிவுட் பிரபலங்கள், கோடீஸ்வரர்கள் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.
- நாட்டின் 73 சதவீத மக்களான ஓபிசி, தலித் அல்லது பழங்குடியினர் கலந்து கொள்ளவில்லை.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த மாதம் ராமர் சிலை பிரதிஷ்டை, ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் நேரடியாக கலந்து கொள்ள நாட்டில் உள்ள பெரும்பாலான பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பெரும்பாலானோர் நேரில் கலந்து கொண்டனர்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மகனும் நடிகருமான அபிசேக் பச்சன், அபிசேக் பச்சனின் மனைவியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அழைப்பிதழ் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பா.ஜனதா மற்றும் மோடியை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.
இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பாலிவுட் பிரபலங்கள், கோடீஸ்வரர்கள் அழைக்கப்பட்டனர். அமிதாப் பச்சன், அபிசேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் ஓபிசி, தலித் அல்லது பழங்குடியினர் என யாரும் கலந்து கொள்ளவில்லை. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 73 சதம்வீதம் பேர் எனத்தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே ஐஸ்வர்ரா ராய் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது.
இந்த நிலையில் ராகுல் காந்தியை பா.ஜனதா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. "இந்திய மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட விரக்தியில் ராகுல் காந்தி இந்தியாவின் பெருமைக்குரிய ஐஸ்வர்ரா ராயை இழிவுப்படுத்தும் புதிய மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார்.
நான்காவது தலைமுறை அரசியல் வம்சம், எந்தவித சாதனையும் இல்லாததோடு, ராகுல் காந்தியின் முழு குடும்பத்தையும் விட இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஐஸ்வர்யா ராய் மீது இப்போது அவதூறுகளை கையாள்கிறார்." எனத் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராயை இழிவு படுத்தும் வகையில் ராகுல் காந்தி பேசிய பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ள பா.ஜனதா, கர்நாடகத்தை சேர்ந்தவர் இழிவுப்படுத்தப்படும்போது சித்தராமையா அமைதியாக இருக்கிறார் எனவும் விமர்சனம் செய்துள்ளது.
"உங்களுடைய தலைவர் தொடர்ந்து சக கன்னடியரை இழிவு படுத்தும் நிலையில், உங்கள் கன்னட பெருமையை நிலைநாட்டி, அத்தகைய அவமரியாதைக்கு எதிராக பேசுவீர்களா அல்லது உங்கள் முதல்வர் நாற்காலியை பாதுகாக்க அமைதியாக இருப்பீர்களா? என சித்தராமையாவுக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளது.