இந்தியா

விமானங்களை தொடர்ந்து 23 ஓட்டல்களுக்கு போலி இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

Published On 2024-10-27 05:58 GMT   |   Update On 2024-10-27 05:58 GMT
  • விமானங்களுக்கு தொடர்ந்து வெடி குண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.
  • மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து விசாரணை.

கொல்கத்தா:

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக விமானங்களுக்கு தொடர்ந்து வெடி குண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் விமானங்கள் தரையிறக்கப்பட்டு சோதனை நடைபெற்ற நிலையில் அவை வெறும் புரளி என்பது உறுதியானது.

சமூக வலைதளங்கள் மற்றும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களை கண்டு பிடிக்கும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா, குஜராத் மாநிலம் ராஜ்கோட், ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள 23 ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொல்கத்தாவில் 10 பெரிய ஓட்டல்களுக்கு இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்தது. இதில் பெரும்பாலான ஓட்டல்கள் நட்சத்திர அந்தஸ்து கொண்டவை. இதைத்தொடர்ந்து அந்த ஓட்டல்களில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தினர். அதில் மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக கொல்கத்தா போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இ-மெயில் மூலம் புனை பெயரை பயன்படுத்தி மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. அதில் ஓட்டல் வளாகத்தில் வெடிகுண்டுகளை கருப்பு பைகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அதை விரைவில் வெடிக்கும். உடனடியாக அங்கிருந்து வெளியேறுங்கள் என கூறப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதியானது. எனினும் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள 10 ஓட்டல்களுக்கு நேற்று மதியம் 12.45 மணி அளவில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. கான்டென் என்ற பெயரில் இ-மெயில் மூலம் அந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.

அதில் 10 ஓட்டல்களில் வெடிகுண்டுகளை வைத்துள்ளதாகவும், அது சில மணி நேரத்தில் வெடித்து விடும். இன்று பல அப்பாவி உயிர்கள் பலியாகும். விரைந்து சென்று ஓட்டல்களை காலி செய்யுங்கள் என தெரிவித்து இருந்தார்.

உடனடியாக வெடி குண்டு செயலிழக்கும் படையினர் மூலம் ஓட்டல் களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சுமார் 5 மணி நேரம் சோதனை நீடித்த நிலையில் ஓட்டல்களில் சந்தேகத்திற் கிடமாக எதுவும் சிக்க வில்லை என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதே போல திருப்பதியி லும் 3 ஓட்டல்களுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்தது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் பெயரை தொடர்புபடுத்தி இந்த மிரட்டல் வந்துள்ளது. உடனடியாக சம்பந்தப் பட்ட போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு மோப்ப நாய், வெடி குண்டு நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது.

ஓட்டல் அறைகளில் இருந்தவர்களை வெளியே அனுப்பி விட்டு அங்குள்ள விடுதிகளில் தீவிர சோதனை நடத்தியதில் மிரட்டல் வீண் புரளி என தெரியவந்தது. மேலும் ஜாபர் சாதிக் பெயரில் போலியான இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News