பம்பை, நிலக்கல்லில் அலைமோதும் கூட்டம்- சபரிமலைக்கு புல்மேடு வழியாக பக்தர்கள் நடைபயணம்
- பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- மிகக்குறைவான தூரத்தில் நடந்து சென்று திரும்பி விடுவதால் இந்த பாதையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
சபரிமலை ஐயப்பன்கோவிலுக்கு தமிழகம், வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருகின்றனர்.
கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நிலக்கல், பம்பை, சன்னிதானம் என அனைத்து இடங்களிலும் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திடீரென அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவசம் போர்டு, கேரள போலீசார் திணறி வருகின்றனர். சபரிமலைக்கு எரிமேலி, நிலக்கல், பம்பை வழியாக ஒரு பாதையும், எரிமேலியில் இருந்து அலுதாநதி, காளைகட்டி, கல்லிடம்குன்று வழியாக நடைபாதையும், வண்டிபெரியாறு வல்லக்கடவு, புல்மேடு, சத்திரம் வழியாக ஒரு பாதையும் என 3 பாதைகள் உள்ளன.
பம்பையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் புல்மேடு வழியாக நடந்து செல்ல பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து கடந்த 2 நாட்களாக சத்திரம், புல்மேடு வழியாக அதிகளவு பக்தர்கள் நடந்து செல்கின்றனர். குமுளி, வண்டிபெரியாறில் இருந்து சுமார் 14 கி.மீ தூரத்திற்கு ஜீப்வசதி உள்ளது. அங்கிருந்து 6 கி.மீ வனப்பகுதியில் நடந்து சென்றால் சபரிமலை சன்னிதானத்தை அடைந்து விடலாம்.
மிகக்குறைவான தூரத்தில் நடந்து சென்று திரும்பி விடுவதால் இந்த பாதையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.