இந்தியாவில் தலை, கழுத்து புற்றுநோய் அதிகரிப்பு- ஆய்வில் தகவல்
- தலை மற்றும் கழுத்து புற்றுநோய் குறிப்பாக இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது.
- முதல் 2 நிலைகளில் நோய் கண்டறியப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் குணப்படுத்தப்படுகின்றனர்.
இந்தியாவில் தலை, கழுத்து புற்றுநோய் அதிகரித்து வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தலை மற்றும் கழுத்து புற்றுநோய் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லியைச் சேர்ந்த கேன்சர் முக்த் பாரத் அறக்கட்டளை நடத்திய ஆய்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இதில் 1,869 புற்றுநோயாளிகளிடம் நடத்திய ஆய்வில் 26 சதவீதம் பேருக்கு தலை மற்றும் கழுத்து புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த கேன்சர் முக்த் பாரத் அறக்கட்டளை, மார்ச் 1 முதல் ஜூன் 30 வரை தனது ஹெல்ப்லைன் எண்ணில் பெறப்பட்ட அழைப்புகளின் தரவுகளைத் தொகுத்து இந்த ஆய்வை நடத்தியது.
இது தொடர்பாக மூத்த புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஆஷிஷ் குப்தா கூறியதாவது:
இந்தியாவில் அதிக புகையிலை நுகர்வு மற்றும் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்று காரணமாக தலை மற்றும் கழுத்து புற்றுநோய், குறிப்பாக இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது.
சுமார் 80-90% வாய் புற்றுநோய் நோயாளிகள் புகையிலை அல்லது மெல்லும் புகையிலையை உபயோகிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
முதல் 2 நிலைகளில் நோய் கண்டறியப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் குணப்படுத்தப்படுகின்றனர். முறையான பரிசோதனை இல்லாததால்தான் இந்தியாவில் மூன்றில் 2 பங்கு பேருக்கு புற்றுநோய் தாமதமாக கண்டறியப்படுகிறது.
எனவே புகையிலை பழக்கத்தை கைவிடவும், நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஆரம்ப பரிசோதனைகள் அவசியம் என்கிற விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.