காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி நடக்கிறது
- காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் அடுத்த மாதம் 4ம் தேதி நடைபெற உள்ளது.
- இதில் வழக்கமான விவாதங்களுடன் மேகதாது அணை விவகாரம் பற்றி பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நீரை பெற, சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றையே ஒவ்வொரு முறையும் தமிழகம் நாட வேண்டியுள்ளது.
இந்த அமைப்புகள் கூடும் கூட்டத்தில் தமிழகம் தனக்கு தேவையான, உரிமையுள்ள தண்ணீரை தர கர்நாடகத்தை வலியுறுத்துமாறு கேட்பதும், அதனை பரிசீலனை செய்து, அதன்பேரில் ஒரு முடிவு எடுத்து குறிப்பிட்ட அளவு நீரை திறக்க கர்நாடகத்தை அந்த அமைப்புகள் வலியுறுத்துவதும் வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4-ம் தேதி கூட உள்ளது. இது 29-வது கூட்டம் ஆகும். இந்தக் கூட்டத்தில் வழக்கமான விவாதங்களுடன் மேகதாது அணை விவகாரம் பற்றி பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பெங்களூரு குடிநீர் தேவைக்காக காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீர் வேண்டும் என கர்நாடக கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில அதிகாரிகளுக்கு ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தார் அழைப்பு விடுத்துள்ளார்.