கோதுமை இருப்பு வைக்க மேலும் கட்டுப்பாடு: விலையை குறைக்க மத்திய அரசு அதிரடி
- கடந்த சில நாட்களாக மீண்டும் கோதுமை விலை அதிகரித்து வருகிறது.
- கோதுமை இருப்பு வைக்க மேலும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து இருக்கிறது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோதுமை விலை அதிகரித்ததை தொடர்ந்து விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
இதன் ஒரு பகுதியாக கோதுமை பதுக்கலை தடுப்பதற்காக பெரும் வணிகர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதாவது கோதுமை மொத்த விற்பனையாளர்கள் மற்றும் பெரும் வணிகர்கள், அதிகபட்சமாக 3,000 டன் கோதுமையே இருப்பு வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கோதுமை விலை குறைந்தது.
ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் கோதுமை விலை அதிகரித்து வருகிறது. எனவே கோதுமை இருப்பு வைக்க மேலும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து இருக்கிறது. இது தொடர்பாக மத்திய உணவுத்துறை செயலளர் சஞ்சீவ் சோப்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கோதுமையை சிலர் தேவைக்கு அதிகமாக இருப்பு வைத்துக்கொண்டு, நாட்டில் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தேவையில்லாமல் விலைவாசியை உயர்த்தி வருகின்றனர்.
கோதுமையின் சமீபத்திய விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, இருப்பு வரையறைகளை ஆய்வு செய்தோம்.
அதன்படி பெரும் வணிகர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் நீண்ட சங்கிலித்தொடர் சில்லறை விற்பனையாளர்களுக்கான இருப்பு வரம்பு 2,000 டன்னாக குறைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் உணவு பதப்படுத்துவோர் மற்றும் சிறிய சில்லறை விற்பனையாளர்களுக்கான இருப்பு வரம்புகளில் மாற்றம் இல்லை. மத்திய அரசின் முடிவுப்படி கோதுமை இருப்பு அளவை 2,000 டன்களாகக் குறைப்பதற்கு பெரும் வணிகர்கள், மொத்த விற்பனையாளர்கள் உள்ளிட்டோருக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டதை தொடர்ந்து கோதுமை விலை சீரான நிலைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. தற்போது, சில்லறை விற்பனையில் கோதுமை விலை சராசரியாக ஒரு கிலோவுக்கு ரூ.30 என்ற அளவில் நிலையாக உள்ளது. நாட்டில் கோதுமை போதுமான அளவு இருப்பு உள்ளது. நேற்றைய நிலவரப்படி, அரசு கிடங்குகளில் 202 லட்சம் டன் இருக்க வேண்டும் என்ற நிலையில், 255 லட்சம் டன்னாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு சஞ்சீவ் சோப்ரா கூறினார்.