கொரோனா தொற்றுக்கு பின் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு- மத்திய அரசு
- கடந்த 2021-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் வெறும் 10 லட்சத்து 52 ஆயிரமாக இருந்தது.
- கடந்த ஆண்டு சுமார் 60 லட்சத்து 19 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
கடந்த 2020ம் ஆண்டு முதல் அடுத்த இரண்டு ஆண்டுகள் வரை கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு தடைகளை மத்திய அரசு விதித்திருந்தது. குறிப்பாக, வெளிநாட்டில் இருந்து மக்கள் இந்தியாவிற்குள் வர தடை விதிக்கப்பட்டது. உள்நாட்டிலேயே மாநிலங்களுக்கு இடையே மக்கள் வந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இதனால், சுற்றுலா துறை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு பின்னர் நாட்டின் சுற்றுலா துறை மறுமலர்ச்சியை கண்டுள்ளதாகவும், கடந்த ஆண்டில் சுமார் 60 லட்சத்து 19 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வந்ததாகவும் மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை மந்திரி கிஷன் ரெட்டி மாநிலங்களைவில் நேற்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நாட்டின் சுற்றுலாத் துறைக்கு ஊக்கம் அளிக்கவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் சுற்றுலா அமைச்சகம் பல முயற்சிகளை எடுத்துள்ளது. அதன் பலனாக கடந்த ஆண்டு சுமார் 60 லட்சத்து 19 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இது கடந்த 2021-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் வெறும் 10 லட்சத்து 52 ஆயிரமாக இருந்தது.
நாட்டில் சுற்றுலா தொடர்பான உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்கும், பார்வையாளர்களுக்கு வளமான சுற்றுலா அனுபவத்தை வழங்குவதற்கும், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய ஏஜென்சிகளுக்கு சுற்றுலா அமைச்சகம் பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி உதவி வழங்கி வருகிறது.
இவ்வாறு கிஷன் ரெட்டி கூறினார்.