தங்க காலணிகளை சுமந்தபடி அயோத்திக்கு நடைபயணம் செல்லும் பக்தர்
- புனித காலணிகளை, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் வழங்குவேன்.
- ராமர் கோவில் கட்டுவதற்காக ஏற்கனவே 5 வெள்ளி செங்கல்களை வழங்கியுள்ளேன்.
ஐதராபாத்:
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம், வருகிற 22-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி அயோத்தி மட்டுமல்ல நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விழாக்கோலம் பூண்டு வருகிறது.
இந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த ராமர் பக்தர் ஒருவர், அயோத்தி ராமருக்காக தங்க முலாம் பூசப்பட்ட காலணிகளை சுமந்தபடி அயோத்திக்கு நடந்தே செல்கிறார்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
ஐதராபாத்தை சேர்ந்தவர் சல்லா சீனிவாச சாஸ்திரி (வயது 64). தீவிர ராமர் பக்தரான இவர், அயோத்தியில் உள்ள சாமி ராமருக்காக ரூ.65 லட்சம் மதிப்பில், ஐம்பொன்னால் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்ட காலணிகளை கொண்டு செல்ல முடிவு செய்தார்.
மேலும் அதனை தனது தலையில் சுமந்தபடி, ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு சுமார் 8 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு புனித நடை பயணமாக செல்ல திட்டமிட்டார்.இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20-ந்தேதி, ராமேஸ்வரத்தில் இருந்து அவர் தனது பயணத்தை தொடங்கினார்.
அவர் தனது பயணத்தின் இடையே லண்டன் செல்ல வேண்டி இருந்ததால் சீனிவாச சாஸ்திரி, தனது பயணத்தை சில நாட்கள் ஒத்தி வைத்து இருந்தார்.
பின்னர் மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தார். தற்போது அவர் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சித்ரகூடம் என்னும் இடத்தில் தனது நண்பர்களுடன் தங்கியுள்ளார். இந்த இடத்தில் இருந்து அயோத்தி நகரம் சுமார் 272 கி.மீ. தொலைவில் உள்ளது.
இன்னும் 10 நாட்களில் அவர் அயோத்திக்கு செல்ல வேண்டும் என்பதால் தினமும் 30 கி.மீ. நடக்க திட்டமிட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுபற்றி சீனிவாச சாஸ்திரி கூறுகையில், 'ஆஞ்சநேயரின் தீவிர பக்தரான எனது தந்தை, அயோத்தியில் நடந்த கர சேவையில் கலந்துகொண்டார். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது அவரது விருப்பம். இப்போது எனது தந்தை இல்லை. அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில், பகவான் ராமருக்காக தங்க முலாம் பூசப்பட்ட காலணிகளை தலையில் சுமந்தபடி புனிதப்பயணமாக வந்துள்ளேன்.
இன்னும் சில தினங்களில் அயோத்தியை சென்று அடைவேன். அங்கு இந்த புனித காலணிகளை, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் வழங்குவேன்.
ராமர் கோவில் கட்டுவதற்காக ஏற்கனவே 5 வெள்ளி செங்கல்களை வழங்கியுள்ளேன். தற்போது சிலரின் நன்கொடை உதவியுடன் இந்த புனித காலணிகளை செய்துள்ளேன். எனது மகன் சல்லா பவன் குமார். சவுண்ட் என்ஜினீயரான அவர் பல திரைப்பட ஸ்டூடியோக்களில் பணிபுரிந்துள்ளார் என்றார்.