காவு வாங்கிய புது வைரஸ்: பரிதாபமாக உயிரிழந்த 4 வயது சிறுமி
- சிறுமியின் மாதிரி பரிசோதனை செய்ததில் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
- ராஜஸ்தானின் உதய்பூரைச் சேர்ந்த நோயாளியும் சண்டிபுரா வைரசால் உயிரிழந்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் சண்டிபுரா வைரசால் 4 வயது சிறுமி உயிரிழந்தார். இந்த வைரஸ் பாதிக்கப்பட்டு அம்மாநிலத்தில் ஏற்பட்ட முதல் மரணம் என்று சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியது.
மாநிலத்தில் 14 நோயாளிகள் தொற்றுநோயால் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் 29 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் காய்ச்சல் மற்றும் கடுமையான மூளையழற்சி (மூளையின் அழற்சி) அறிகுறிகளை கொண்டுள்ளது.
சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஹிமத்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் 4 வயது சிறுமி வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். இவர் ஆரவல்லி மாவட்டம் மோட்டா கந்தாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். சிறுமியின் மாதிரி பரிசோதனை செய்ததில் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இது மாநிலத்தில் சண்டிபுரா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட முதல் மரணம் என்று சபர்கந்தா தலைமை மாவட்ட சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜஸ்தானின் உதய்பூரைச் சேர்ந்த நோயாளியும் சண்டிபுரா வைரசால் உயிரிழந்துள்ளார்.
இதுதவிர ராஜஸ்தானின் உதய்பூரைச் சேர்ந்த மற்றொரு நோயாளியும், மத்தியப் பிரதேசத்தின் தாரைச் சேர்ந்த ஒருவரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.