முதல்-மந்திரியாக பதவி ஏற்றதும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்கிறார் சந்திரபாபு நாயுடு
- பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
- சந்திரபாபு நாயுடு வருகையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் அந்த மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது.
ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. எதிர்க்கட்சியாக இருந்த தெலுங்கு தேசம், பா.ஜ.க. மற்றும் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 135 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றது. பவன் கல்யாணின் ஜனசேனா 21 இடங்களிலும் பா.ஜ.க. 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
மத்தியில் அமைந்த என்.டி.ஏ. கூட்டணி ஆட்சியில் தெலுங்கு தேசம் கட்சி முக்கிய பங்கு வகித்ததால் ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் மாநிலத்தில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று காலை நடந்தது.
இதில் சட்டப்பேரவைத் தலைவராக சந்திரபாபு நாயுடு ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் நடிகர் பவன் கல்யாணை துணை முதல்-மந்திரியாக தேர்ந்தெடுப்பது குறித்தும் அமைச்சர்கள் பட்டியல் தயார் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில கவர்னர் அப்துல் நஷீரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.
விஜயவாடா சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள கண்ணவரம் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் நாளை காலை பதவி ஏற்பு விழா நடக்கிறது. காலை 11.27 மணிக்கு சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் கண்ணவரம் தொழில்நுட்பப் பூங்கா வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடு பதவியேற்ற உடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார். பதவி ஏற்பு விழா முடிந்தவுடன் நாளை மாலை தனது குடும்பத்தினருடன் திருப்பதி மலைக்கு வருகிறார். இரவு அங்கு தங்குகிறார். நாளை மறுநாள் அதிகாலை வி.வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்.
சந்திரபாபு நாயுடு வருகையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சந்திரபாபு நாயுடு தரிசனத்திற்கு வருவதால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமானவராக கருதப்படும் முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி இன்று முதல் வரும் 17-ந்தேதி வரை கட்டாய விடுப்பில் சென்றுவிட்டார். வருகிற 30-ந்தேதி தர்மா ரெட்டி ஓய்வு பெறுகிறார்.