வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2500 - சத்தீஸ்கரில் நாளை முதல் அமல்!
- மாநிலம் முழுக்க வேலையில்லா இளைஞர்களுக்கு சத்தீஸ்கர் அரசு வழங்கும் உதவித்தொகை திட்டம் அமலுக்கு வருகிறது.
- ஒவ்வொரு குடும்பத்தில் இருந்து இந்த உதவித்தொகை பெற ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2 ஆயிரத்து 500 உதவித்தொகை வழங்கும் திட்டம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளை (ஏப்ரல் 1) அமலுக்கு வருகிறது. சத்தீஸ்கர் அரசு சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிக்கையில், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, வேலையில்லாமல் தவிப்போருக்கு மாதம் ரூ. 2 ஆயிரத்து 500 உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் ரூ. 2 ஆயிரத்து 500 உதவித்தொகை பெறுவோரின் குடும்ப வருவாய் ஆண்டிற்கு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் இருப்பது அவசியம் ஆகும். ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் அதிகபட்சம் ஒருவர் மட்டுமே இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்க முடியும்.
மந்திரிகள், முன்னாள் மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நகராட்சி, மாநகராட்சி தலைவர்கள், முன்னாள் தலைவர்களின் குடும்பத்தினர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது. இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவோருக்கு அந்த ஆண்டு முழுக்க வேலை கிடைக்கவில்லை எனில், உதவித்தொகை திட்டம் அடுத்த ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்து, அதனை மறுத்து இருந்தாலும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் அதற்கான விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், உதவித்தொகை பயனர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு விடும்.
மார்ச் 6 ஆம் தேதி நடைபெற்ற சத்தீஸ்கர் சட்டப்பரேவை பட்ஜெட்டில் முதலமைச்சர் பூபேஷ் பாகெல், வேலையில்லாத இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டம் அடுத்த நிதியாண்டில் இருந்து பயன்பாட்டுக்கு வரும் என்று முதல்வர் அறிவித்து இருந்தார்.