திருமணத்திற்கு முன் பிறந்ததால் தத்து கொடுத்த குழந்தையை மீண்டும் தாயிடம் ஒப்படைக்க வேண்டும்-கோர்ட் உத்தரவு
- குழந்தையை வளர்க்கும் உரிமை குழந்தையை பெற்ற தாய்க்கே உள்ளது எனவும் கோர்ட்டு கூறியது.
- குழந்தையின் வளர்ப்பு பெற்றோர், குழந்தையை முறையாக தத்து எடுத்திருப்பதாகவும், எனவே அதனை தாயிடம் கொடுக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
மும்பை:
மும்பையை சேர்ந்த 25 வயது இளம்பெண், வாலிபர் ஒருவரை காதலித்தார்.
காதல் ஜோடி திருமணத்திற்கு முன்பே பல இடங்களுக்கும் சென்று உல்லாசமாக இருந்தனர். இதில் அந்த பெண் கர்ப்பம் ஆனார். இதுபற்றி காதலனிடம் கூற அவர் உடனடியாக திருமணம் செய்ய மறுத்தார்.
இதற்கிடையே நிறைமாத கர்ப்பிணியான அந்த பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2021-ம் ஆண்டு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
திருமணத்திற்கு முன்பே குழந்தை பிறந்ததால் அதனை எப்படி வளர்ப்பது என தெரியாமல் திணறிய இளம்பெண்ணை சந்தித்த சிலர், அந்த குழந்தையை தத்து கொடுத்துவிடுமாறு கூறினர்.
அப்போது இருந்த மனநிலையில் அந்த பெண்ணும் அதற்கு ஒப்பு கொண்டார். அவரிடம் பேசிய இடைதரகர்கள், குழந்தையை தத்து எடுப்பவர்கள் மிகப்பெரிய செல்வந்தர்கள் என்றும், அவர்கள் குழந்தையை நன்றாக வளர்ப்பார்கள் எனவும் கூறினர்.
இந்நிலையில் குழந்தையை தத்து கொடுத்த பெண், அவரது காதலனை திருமணம் செய்து கொண்டார். எனவே அவர், தத்து கொடுத்த குழந்தையை மீண்டும் வாங்க முயற்சி செய்தார்.
ஆனால் குழந்தையை தத்து எடுத்து அதனை வளர்த்து வரும் பெற்றோர் குழந்தையை தாயிடம் கொடுக்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து குழந்தையின் தாய், மும்பை மாநகர கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின் போது கோர்ட்டில் ஆஜரான குழந்தையின் வளர்ப்பு பெற்றோர், குழந்தையை முறையாக தத்து எடுத்திருப்பதாகவும், எனவே அதனை தாயிடம் கொடுக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
வழக்கை விசாரித்த கோர்ட்டு தத்தெடுப்பு தொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.
அதன்படி வளர்ப்பு பெற்றோர் கோர்ட்டில் தத்தெடுப்பு ஆவணங்களை ஒப்படைத்தனர். அந்த ஆவணங்கள் கடந்த 2022-ம் ஆண்டே கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்ட ஆவணம் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து வளர்ப்பு பெற்றோர், குழந்தையை அதனை பெற்ற தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த வாரம் உத்தரவிட்டது. குழந்தையை வளர்க்கும் உரிமை குழந்தையை பெற்ற தாய்க்கே உள்ளது எனவும் கோர்ட்டு கூறியது.