புதினை தொடர்ந்து ஜி20 உச்சி மாநாட்டை தவிர்க்கும் சீன அதிபர் - காரணம் என்ன தெரியுமா?
- செப்டம்பர் 9, 10 தேதிகளில் புது டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது
- சீன-அமெரிக்க உறவு சமீப காலங்களில் சீர்குலைந்திருக்கிறது
உலகின் 19 நாடுகளையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பு ஜி20.
உலக பொருளாதாரத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்க கூடிய பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்து தீர்வு காண அமைக்கப்பட்ட இக்கூட்டமைப்பு, முதல் முறையாக 2008-ல் அமெரிக்காவின் வாஷிங்டனில் சந்தித்தது.
தற்போது இம்மாதம் 9, 10 ஆகிய தேதிகளில் புது டெல்லியில் இதன் அடுத்த உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என்றும் புதினுக்கு பதிலாக ரஷிய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லவ்ரவ் ரஷியாவின் சார்பில் பங்கேற்பார் என ரஷியா அதிகாரபூர்வமாக அறிவித்தது.
ரஷிய உக்ரைன் போரில், ரஷியாவிற்கு எதிராக அமெரிக்கா செயல்பட்டு வரும் நிலையில், ஜி20 உச்சி மாநாட்டிற்காக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பது தவிர்க்க முடியாததாகும். சமீப காலங்களாக வர்த்தக மற்றும் புவிசார் அரசியல் காரணங்களுக்காக சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு கசப்பான நிலையை அடைந்திருக்கிறது.
இப்பின்னணியில் அமெரிக்க அதிபரை சந்திப்பதை தவிர்க்கும் விதமாக, ரஷிய அதிபர் புதினை போல சீன அதிபரும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சீன அதிபருக்கு பதிலாக அந்நாட்டு தூதர் லி கியாங், சீனாவின் சார்பாக புது டெல்லிக்கு வருகை தருவார் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்த வெளியுறவு துறையின் செய்தித்தொடர்பாளர்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
அண்மை காலங்களில், கடந்த 2022 நவம்பர் மாதம் இந்தோனேசியாவில் உள்ள பாலியில் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.