ராஜமுந்திரி ஜெயிலில் சந்திரபாபு நாயுடுவிடம் சி.ஐ.டி. அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை
- சிறைத்துறை அதிகாரிகள் சந்திரபாபு நாயுடுவை அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.
- சந்திரபாபு நாயுடுவிடம் 2-வது நாளாக இன்று மீண்டும் சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர பிரதேச முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக சி.ஐ.டி. அதிகாரிகள் அவரை கைது செய்து விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து சந்திரபாபு நாயுடுவை ராஜமுந்திரி மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
நேற்று முன்தினம் சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்தது. சந்திரபாபு நாயுடுவை மீண்டும் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
அப்போது சந்திரபாபு நாயுடுவிடம் 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சி.ஐ.டி. அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.
சி.ஐ.டி. அதிகாரிகளின் மனு தாக்கல் ஏற்ற நீதிபதி சந்திரபாபு நாயுடுவிடம் 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார். விசாரணையின் போது ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சந்திரபாபு நாயுடு தனது வக்கீல்களை சந்தித்து கலந்து ஆலோசிக்க காலகால அவகாசம் வழங்க வேண்டும் ஒரு வீடியோகிராபர் 2 ஊடகவியலாளர்கள் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தனர்.
இதையடுத்து சிஐடி பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பிக்கள் 3 பேர் இளநிலை போலீஸ் அதிகாரிகள் 6 பேர் நேற்று காலை 9.30 மணி அளவில் ராஜமுந்திரி ஜெயிலுக்கு சென்றனர்.
அப்போது சிறைத்துறை அதிகாரிகள் சந்திரபாபு நாயுடுவை அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் போலீஸ் அதிகாரிகள் சந்திரபாபு நாயுடுவிடம் தொடர்ந்து 2½ மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அப்போது சந்திரபாபு நாயுடுவின் வக்கீல்கள் சீனிவாசராவ், சுப்பாராவ் உடன் இருந்தனர். மதியம் 1 மணி நேர உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் மாலை 5 மணி வரை சுமார் 6 மணி நேரம் கிடுக்குபிடி கேள்விகளால் சந்திரபாபு நாயுடுவிடம் விசாரணை நடத்தினர்.
73 வயதான சந்திரபாபு நாயுடு போலீஸ் அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்திரபாபு நாயுடுவிடம் 2-வது நாளாக இன்று மீண்டும் சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
இந்த நிலையில் திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என ஆந்திர உயர்நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
இதையடுத்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் சந்திரபாபு நாயுடு மீது போடப்பட்டுள்ள ஊழல் வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.