அட்டகாச வடிவமைப்பில் அமர்க்களப்படுத்தும் இரவு நேர வந்தே பாரத்
- தற்போது இயங்கும் ரெயில்களில் அமரும் வசதி மட்டுமே உள்ளது
- தமிழக நகரங்களுக்கு இடையே 2 ரெயில்கள் இயங்குகின்றன
இந்தியாவில் உள்ள பல மாநிலங்களின் பல்வேறு நகரங்களை இணைக்கவும், மாநிலங்களிக்கு உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையிலும் இந்தியன் ரெயில்வேயால் துவங்கப்பட்டது 'வந்தே பாரத்' ரெயில் சேவை.
தற்போது பகல் நேர ரெயில் சேவையாக இருப்பதால், அமரும் வசதி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்கள் மணிக்கு சுமார் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
எந்த அயல்நாட்டு தொழில்நுட்பத்தையும் நாடாமல், இந்த ரெயில்களின் கட்டமைப்பு 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஐ.சி.எஃப். நிறுவனத்தாலேயே முழுவதும் வடிவமைக்கப்பட்டது இதன் மற்றொரு சிறப்பம்சம்.
தற்போது வரை இந்தியா முழுவதும் 34 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கோவை-சென்னை வழித்தடத்திலும், திருநெல்வேலி-சென்னை வழித்தடத்திலும் என 2 ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், படுக்கை வசதியுடன் வரப்போகும் வந்தே பாரத் ரெயில்களின் 'மாதிரி' வடிவங்களின் படங்களை இந்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்.
16 பெட்டிகளை கொண்ட இந்த ரெயிலில் பணியாளர்களுக்கு 34 படுக்கைகளும் பயணிகளுக்கு 823 படுக்கைகளும் என மொத்தம் 857 படுக்கைகள் இடம்பெறும். அதிர்வுகளை தாங்க கூடிய மேம்படுத்தப்பட்ட ஷாக் அப்சார்பர்கள், போதிய அளவு வெளிச்சத்திற்கான மின் விளக்குகள், இரண்டு படுக்கைகளுக்கு இடையே போதிய இடைவெளி, மேலே உள்ள படுக்கைகளுக்கு சுலபமாக ஏறும் வகையில் படிக்கட்டு வசதி என பயணிகளை ஈர்க்கும் வகையில் பல வசதிகள் இதில் உள்ளது.
உயர் கட்டண பிரிவு ரெயில் சேவையான ராஜ்தானி விரைவுவண்டியில் உள்ள வசதிகளை விட இது சிறப்பாக இருக்கும் வகையில், இதன் வடிவமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் பிப்ரவரி மாதவாக்கில் சோதனை ஓட்டத்திற்கு இது விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.