சோனியா காந்தியின் குடும்ப கட்டுப்பாட்டில்தான் காங்கிரஸ் உள்ளது- அசாம் முதல்வர் கருத்து
- காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஒரு கேலி கூத்தான நாடகம்.
- காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை, அதிகாரம் மட்டுமே உள்ளது.
தெக்ரி கர்வால்:
காங்கிரஸ் கட்சியில் பல தலைவர்கள் இருந்தாலும், முக்கிய தலைவர்கள் காந்தி (சோனியாகாந்தி) குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் குறிப்பிட்டுள்ளார்.
மல்லிகார்ஜுனா கார்கே கட்சியின் தேசிய தலைவர் என்றும், காங்கிரஸ் அமைப்பை வலுப்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதை பாஜக விமர்சித்துள்ளது.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜகவை சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, கூறியுள்ளதாவது:
முதல் நாளிலிருந்தே நான் கூறியதை சல்மான் குர்ஷித் உறுதிப்படுத்தி உள்ளார். அதிகாரம் காந்தி (சோனியாகாந்தி) குடும்பத்திடம் மட்டுமே உள்ளது. காங்கிரசில் நடைபெற்ற தலைவர் தேர்தல், கட்சியில் ஜனநாயகம் மற்றும் மாற்றத்தை பிரதிபலிப்பதாக சிலர் தெரிவித்தனர்.
காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஒரு கேலி கூத்தான நாடகம். கார்கேவை ரிமோட் கண்ட்ரோலாக மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்துகிறது. அவர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் மட்டுமே, காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை, அதிகாரம் காந்தி குடும்பத்திடம் மட்டுமே உள்ளது என்பதே உண்மை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.