"ஒரே மனிதன், ஒரே அரசு, ஒரே வர்த்தக நிறுவனம்": மோடி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
- மாநாட்டின் மையக்கருத்தாக "வசுதைவ குடும்பகம்" எனும் சித்தாந்தம் இடம்பெறுகிறது
- 2014, 2018 ஜி20 மாநாடுகளில் ஊழலுக்கு எதிராக மோடி பேசினார் என்றார் ஜெய்ராம் ரமேஷ்
ஜி20 நாடுகளின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புது டெல்லியில் தற்போது நடைபெறுகிறது. இன்று காலை தொடங்கிய இம்மாநாடு நாளையுடன் முடிவடைகிறது.
இம்மாநாட்டின் மையக்கருத்தாக "வசுதைவ குடும்பகம்" எனும் "உலகம் முழுவதும் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" எனும் சித்தாந்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முழக்கத்தை கிண்டல் செய்யும் விதமாக காங்கிரஸ் கட்சி, பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமத்தின் மீது நிதி முறைகேடு சம்பந்தமான குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பர்க் எனும் அமெரிக்க அமைப்பு சில மாதங்களுக்கு முன்பாக அறிக்கை ஒன்றில் வெளியிட்டது.
இதனை குறிப்பிட்டு பிரதமர் மீது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
"2014 ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி கருப்பு பண பதுக்கலுக்கான பாதுகாப்பு புகலிடங்களை ஒழிக்க வேண்டும் என கூறியிருந்தார். ஊழல்வாதிகளை காக்கும் விதமாக உள்ள வங்கி பரிவர்த்தனை நடைமுறை சிக்கல்களை மாற்றவும் கோரியிருந்தார். 2018 ஜி20 மாநாட்டில் சொந்த நாட்டில் பொருளாதார குற்றங்களை புரிந்து விட்டு அயல்நாடுகளுக்கு தப்பியோடும் குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் கோரியிருந்தார்."
"ஆனால், அதானி குழுமத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக செபி, சிபிஐ, அமலாக்கத்துறை, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் மற்றும் தீவிர பணமோசடி விசாரணை அலுவலகம் ஆகியவை எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார்."
"ஜி20 மாநாட்டிற்கான முழக்கமாக 'ஓரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்பது இருக்கலாம். ஆனால், பிரதமர் 'ஒரே மனிதன், ஒரே அரசாங்கம், ஒரே வர்த்தக நிறுவனம்' எனும் நோக்கத்தைத்தான் நம்புவதாக தெரிகிறது," என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கிறார்.
அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க காங்கிரஸ் கோரி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.