இந்தியா

பங்கு சந்தையில் தொடர் சரிவு: ரூ.20 ஆயிரம் கோடிக்கு புதிய பங்கு விற்பனையை ரத்து செய்த அதானி நிறுவனம்

Published On 2023-02-02 11:29 GMT   |   Update On 2023-02-02 11:29 GMT
  • கடந்த 4 நாட்களில் மட்டும் அதானியின் டோடல் கேஸ் பங்குகள் மட்டும் 50 சதவீதம் சரிந்துள்ளன.
  • எனது முதலீட்டாளர்கள் நலன் மிகவும் முக்கியமானது. மற்ற அனைத்தும் 2-ம் பட்சம்தான்.

புதுடெல்லி:

அதானி குழுமத்தின் மீது ஹின்டன்பர்க் நிறுவனம் பல்வேறு முறைகேடு புகார்களை கூறியது.

இந்த ஆய்வறிக்கை காரணமாக அதானி குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பு 30 சதவீதத்திற்கு மேல் சரிவை சந்தித்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் அதானியின் சொத்து மதிப்பும், ரூ.3.28 லட்சம் கோடி குறைந்துள்ளது. இதனால் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 15-வது இடத்திற்கு அதானி தள்ளப்பட்டார்.

கடந்த 4 நாட்களில் மட்டும் அதானியின் டோடல் கேஸ் பங்குகள் மட்டும் 50 சதவீதம் சரிந்துள்ளன. அதானி குழுமத்தின் பங்குகள் உண்மையான நிலையை அறியும் வரை தொடர்ந்து சரிந்து கொண்டேதான் இருக்கும் என கூறப்படுகிறது.

இதற்கிடையே அதானி குழுமங்களில் ஒன்றான அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் பங்கு சந்தையில் ரூ.20 ஆயிரம் கோடி நிதி திரட்டுவதற்காக புதிய பங்குகளை வெளியிட இருந்தது.

முதலீட்டாளர்களும், பங்குகளை வாங்க விண்ணப்பித்து பணம் செலுத்தியிருந்தனர். இந்நிலையில் பங்கு சந்தையில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் புதிய பங்கு விற்பனையை ரத்து செய்வதாக அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையடுத்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்கவும், அதானி குழுமம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அதானி என்டர்பிரைசஸ் தலைவர் கவுதம் அதானி வெளியிட்டுள்ள அறிக்கையில், பங்கு சந்தை முன் எப்போதும் இல்லாத வகையில் உள்ளது.

நாளடைவில் ஏற்ற இறக்கமாக இருப்பதால் அசாதாரண சூழ்நிலை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனது முதலீட்டாளர்கள் நலன் மிகவும் முக்கியமானது. மற்ற அனைத்தும் 2-ம் பட்சம்தான்.

எனவே எந்த ஒரு சாத்தியமான நிதி இழப்புகளில் இருந்தும், அவர்களை பாதுகாக்க எப்.பி.ஓ.(பாலோ ஆன் பப்ளிக் ஆபர்) உடன் செல்ல வேண்டாம் என்று அதானி வாரியம் முடிவு செய்துள்ளது என கூறப் பட்டுள்ளது.

மேலும் அதானி வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோ அறிக்கையில், ஒரு தொழிலதிபராக எனது பயணத்தில், அனைத்து பங்குதாரர்களிடம் இருந்தும், குறிப்பாக முதலீட்டாளர்கள் சமூகத்தின் அமோக ஆதரவை பெறுவதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News