சமையல் கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு அமலுக்கு வந்தது- சிலிண்டர் ரூ910-க்கு விற்பனை
- கடந்த பிப்ரவரி மாதம் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 1000 ரூபாயை தாண்டியது.
- மத்தியஅரசின் இந்த விலை குறைப்பு கேரள மாநிலத்திலும் உடனடியாக அமலுக்கு வந்தது.
திருவனந்தபுரம்:
சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 1000 ரூபாயை தாண்டியது.
இந்நிலையில் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்து நேற்று முன்தினம் மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு தமிழகத்தில் உடனடியாக அமலுக்கு வந்தது. தொடர்ந்து விலை உயர்ந்து வந்த நிலையில், கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.200 குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மத்தியஅரசின் இந்த விலை குறைப்பு கேரள மாநிலத்திலும் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனால் 1,100 ரூபாயக்கு மேல் விற்கப்பட்ட வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டரின் விலை 1000 ரூபாய்க்கு கீழ் வந்துள்ளது. எர்ணாகுளம் மற்றும் கோட்டயத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.910-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோழிக்கோடு மற்றும் மலப்புரத்தில் ரூ.911-க்கும், திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தில் ரூ.912-க்கும், ஆலப்புழா மற்றும் திருச்சூரில் ரூ.915-க்கும், பத்தினம்திட்டா மற்றும் கொச்சியில் ரூ.920-க்கும், பாலக்காட்டில் ரூ.921-க்கும், கண்ணூர், காசர்கோடு மற்றும் வய நாட்டில் ரூ923-க்கும் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் வினியோகிக்கப்படுகிறது.