ஜாபர் சாதிக்கிடம் வாக்குமூலம் பெற அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு அனுமதி
- வருகிற 8, 9, 10-ந்தேதிகளில் ஜாபர் சாதிக்கிடமும், அவருக்கு உதவியாக இருந்த மேலும் 4 பேரிடமும் வாக்குமூலம் பெறப்படுகிறது.
- திகார் ஜெயிலுக்குள் லேப்டாப் உள்ளிட்ட கருவிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துச் செல்லலாம்.
புதுடெல்லி:
சென்னையில் இருந்து டெல்லி வழியாக வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தியதாக தி.மு.க. நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் போதைப்பொருள் கடத்தி இருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
கைதான ஜாபர்சாதிக்கிடம் சென்னை அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பிறகு அவர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் வாக்குமூலம் பெற அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக டெல்லி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த டெல்லி சிறப்பு கோர்ட்டு ஜாபர்சாதிக்கிடம் திகார் ஜெயிலில் வாக்குமூலம் பெறலாம் என்று அனுமதி வழங்கி உள்ளது.
அதன்படி வருகிற 8, 9, 10-ந்தேதிகளில் ஜாபர் சாதிக்கிடமும், அவருக்கு உதவியாக இருந்த மேலும் 4 பேரிடமும் வாக்குமூலம் பெறப்படுகிறது. இதற்காக திகார் ஜெயிலுக்குள் லேப்டாப் உள்ளிட்ட கருவிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துச் செல்லலாம் என்று சிறப்பு கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.
வாக்குமூலம் பெறப்பட்ட பிறகு ஜாபர்சாதிக் மீதான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த அமலாக்கத்துறை முடிவு செய்து உள்ளது.