இந்தியா

சர்ச்சையில் சிக்கிய பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேட்கர் மீது மோசடி வழக்கு

Published On 2024-07-20 03:19 GMT   |   Update On 2024-07-20 03:19 GMT
  • பூஜா கேட்கரின் தாய் மனோரமா கேட்கர் நிலப்பிரச்சனையில் விவசாயியை துப்பாக்கியால் மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.
  • ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அடுத்தடுத்து நடவடிக்கை பாய்வது மகாராஷ்டிரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை:

மகாராஷ்டிர மாநிலம் புனே கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் அந்தஸ்தில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பூஜா கேட்கர்(வயது34). விதிமுறையை மீறி தனது சொகுசு காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தியது, அலுவலகத்தில் தனியறை கேட்டு அடம் பிடித்தது, கூடுதல் கலெக்டரின் அறையை ஆக்கிரமித்தது போன்ற வெவ்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

இதையடுத்து இவர் சமீபத்தில் வாசிம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அதிரடியாக மாற்றப்பட்டார்.

இதற்கிடையே பூஜா கேட்கர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக மாற்றுத்திறனாளி ஒதுக்கீடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இது குறித்து விசாரிக்க மத்திய அரசின் கூடுதல் செயலாளர் மனோஜ்குமார் திவேதி தலைமையில் ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது.

இதற்கிடையே பூஜா கேட்கரின் தாய் மனோரமா கேட்கர் நிலப்பிரச்சனையில் விவசாயியை துப்பாக்கியால் மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டார். இதேபோல அவரது தந்தை திலீப் கேட்கர் அரசு அதிகாரியாக இருந்த போது 2 முறை லஞ்ச வழக்கில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்தநிலையில் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய விசாரணையில் பூஜா கேட்கர் தனது பெயர், தந்தை பெயர், தாய் பெயர், புகைப்படம், கையெழுத்து, இ-மெயில் ஐ.டி., செல்போன் எண், முகவரி ஆகியவற்றை மாற்றி அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அவர் மீது போலீசில் மோசடி வழக்கு தொடர்ந்து உள்ளது.

மேலும் அவரது ஐ.ஏ.எஸ். தேர்வை ரத்து செய்யவும், எதிர்காலத்தில் அவர் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத தடை விதிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சர்ச்சையில் சிக்கிய பயிற்சி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அடுத்தடுத்து நடவடிக்கை பாய்வது மகாராஷ்டிரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் போலீசில் மோசடி வழக்குப்பதிவு செய்த நிலையில், பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேட்கர் மகாராஷ்டிர மாநிலம் வாசிம் அரசு ஓய்வு இல்லத்தை காலி செய்தார். அவர் தற்போது பணிபுரிந்து வரும் வாசிமில் இருந்து தனியார் காரில் வெளியூருக்கு புறப்பட்டு சென்றார். அவர் நாக்பூர் சென்றதாக கூறப்படுகிறது.

வாசிம் அரசு ஓய்வு இல்லத்தில் இருந்து புறப்படும்போது பூஜா கேட்கர் கூறுகையில், "நீதித்துறை அதன் கடமையை செய்யும். நான் விரைவில் திரும்பி வருவேன்" என்றார்.

Tags:    

Similar News