கிறிஸ்தவ கூட்டத்தில் குண்டு வெடிப்பு தீக்காயம் அடைந்த மேலும் ஒரு பெண் பலி: எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது
- சாலி பிரதீப் தனது மகள் லிபினா, மகன்கள் பிரவின், ராகுல் ஆகியோருடன் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
- தாய்-மகள் குண்டு வெடிப்பில் சிக்கி பலியான சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சி அருகே களமசேரியில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் கடந்த 27-ந்தேதி கிறிஸ்தவ அமைப்பின் கூட்டம் நடந்தபோது குண்டு வெடித்தது.
இந்த சம்பவத்தில் பெரும்பாவூர் இரிங்கோல் பகுதியை சேர்ந்த லியோனா பவுலோஸ் (வயது 55) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தார். மேலும் பலர் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் மோலி ஜாய், குமாரி புஷ்பன் (53) மற்றும் லிபினா (12) ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இந்நிலையில் கொச்சி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த லிபினாவின் தாயார் சாலி பிரதீப் (45) சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதன்மூலம் குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. சாலி பிரதீப் தனது மகள் லிபினா, மகன்கள் பிரவின், ராகுல் ஆகியோருடன் கூட்டத்தில் கலந்து கொண்டார். தற்போது அவரும் மகளும் பலியாகிவிட்ட நிலையில், மகன் ராகுல் தீவிர சிகிச்சையில் உள்ளார். கிறிஸ்தவ கூட்டத்திற்கு சென்ற தாய்-மகள் குண்டு வெடிப்பில் சிக்கி பலியான சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.