இந்தியா

மத்திய அரசின் அவசர சட்ட நகலை எரிப்போம்: ஆம் ஆத்மி கட்சி அதிரடி அறிவிப்பு

Published On 2023-06-30 12:38 GMT   |   Update On 2023-06-30 12:38 GMT
  • ஜூலை 5ம் தேதி, 70 சட்டமன்றத் தொகுதிகளிலும் அவசரச் சட்டத்தின் நகல்கள் எரிக்கப்படும்.
  • மத்திய அரசின் நடவடிக்கையானது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறும் செயல் என ஆம் ஆத்மி அரசாங்கம் கூறியது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜூலை 3ம் தேதி, மத்திய டெல்லியில் உள்ள அவரது ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில், மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற அவசர சட்டத்தின் நகலை எரிப்பார் என்று அக்கட்சி இன்று அறிவித்துள்ளது.

செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளரும், டெல்லி அமைச்சருமான சௌரப் பரத்வாஜ் கூறியதாவது:

கருப்பு அவசரச் சட்டம் மூலம் டெல்லியை சட்டவிரோத கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது. இதனை எதிர்த்து, ஜூலை 3ம் தேதி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேபினட் அமைச்சர்கள் மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்சி அலுவலகத்தில் கருப்பு அவசரச் சட்டத்தின் நகல்களை எரிக்க வேண்டும். பிறகு, ஜூலை 5ம் தேதி, 70 சட்டமன்றத் தொகுதிகளிலும் அவசரச் சட்டத்தின் நகல்கள் எரிக்கப்படும். அதற்கு பிறகு, ஜூலை 6 முதல் ஜூலை 13 வரை, டெல்லியின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அவசரச் சட்டத்தின் நகல்கள் தீ வைத்து எரிக்கப்படும். கட்சியின் 7 துணைத்தலைவர்களும் டெல்லியின் ஒவ்வொரு பகுதியிலும் அவை எரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில், அக்கட்சியின் 7 துணைத் தலைவர்களான திலீப் பாண்டே, ஜர்னைல் சிங், குலாப் சிங், ஜிதேந்தர் தோமர், ரிதுராஜ் ஜா, ராஜேஷ் குப்தா மற்றும் குல்தீப் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டெல்லியின் காவல்துறை, பொது ஒழுங்கு மற்றும் நிலம் உள்ளிட்ட சேவைகளின் கட்டுப்பாட்டை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் மே-11 அன்று உச்சநீதிமன்றம் ஒப்படைத்தது. உச்ச நீதிமன்றத்தின் மே-11 தீர்ப்புக்கு முன்னர் டெல்லி அரசாங்கத்தின் அனைத்து அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் பணியிடமர்த்தல் அதிகாரங்கள், டெல்லி லெப்டினன்ட் கவர்னரின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.

டெல்லியில் ஐ.ஏ.எஸ். (IAS) மற்றும் டானிக்ஸ் (DANICS) அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கும், பணியமர்த்துவதற்கும் அதிகாரத்தை உருவாக்குவதற்கான ஒரு அவசரச் சட்டத்தை மே 19 அன்று மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசு கொண்டு வந்த இந்த அவசர சட்டம், குரூப்-ஏ அதிகாரிகளுக்கு எதிராக இடமாற்றம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்காக தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையத்தை அமைக்க வழி செய்கிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது, சேவைக் கட்டுப்பாடு குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறும் செயல் என ஆம் ஆத்மி அரசாங்கம் கூறியது.

ஜூன் 11ம் தேதி இந்த அவசரச் சட்டத்திற்கு எதிராக அக்கட்சி ஒரு மகா பேரணியை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News