மதுபான கொள்கை முறைகேடு வழக்கு- கெஜ்ரிவால் மனைவிக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு
- வீடியோவில் கெஜ்ரிவால் கோர்ட்டில் உரையாடியது இடம்பெற்றுள்ளது.
- வழக்கு விசாரணையை ஜூலை 9-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகி உள்ளனர்.
இந்த நிலையில் கெஜ்ரிவால் வழக்கு விசாரணையின் வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதாக வக்கீல் வைபவ் என்பவர் குற்றம்சாட்டி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல செய்துள்ளார். அந்த வீடியோவில் கெஜ்ரிவால் கோர்ட்டில் உரையாடியது இடம்பெற்றுள்ளது என்றும், இது கோர்ட்டு நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
9 முதல் 9.30 நிமிடங்கள் வரை அந்த வீடியோ இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் நினா பன்சால், அமித் சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை இன்று விசாரித்தது. இது தொடர்பாக கெஜ்ரிவால் மனைவி சுனிதா உள்பட 6 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். கலால் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பான நீதிமன்ற நடவடிக்கையின் வீடியோ பதிவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்குமாறு சுனிதாவுக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
வழக்கு விசாரணையை ஜூலை 9-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.