கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த டெல்லி ஐகோர்ட்
- முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்
- கைது செய்யப்பட்டாலும், டெல்லி முதல்-மந்திரியாக கெஜ்ரிவால் தொடர்வார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரை 28-ந்தேதி (இன்று) வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அமலாக்கத்துறை காவல் முடிவடைவதை தொடர்ந்து இன்று மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
கைது செய்யப்பட்டாலும், டெல்லி முதல்-மந்திரியாக கெஜ்ரிவால் தொடர்வார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம், இவ்விவகாரத்தில் டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க முடியும், நீதிமன்றம் எவ்வாறு, இதில் தலையிட முடியும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது.