ரூ.2 ஆயிரம் நோட்டு வாபசுக்கு எதிரான பொதுநல மனு தள்ளுபடி- டெல்லி ஐகோர்ட் உத்தரவு
- மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
- வழக்கு விசாரணை மே மாதம் 30-ந்தேதி முடிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
புதுடெல்லி:
நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக கடந்த 19-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகள் மூலம் மாற்றியும், டெபாசிட் செய்யப்பட்டும் வருகிறது. இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30-ந்தேதியுடன் முடிவடைகிறது.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ரஜ்னீஷ் பாஸ்கர் குப்தா என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதற்கு ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இல்லை என்றும், இதுதொடர்பாக மத்திய அரசு தான் முடிவு எடுக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
1934 ரிசர்வ் வங்கி சட்டத்தின் 24(2) பிரிவின்படி மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சதிஷ் சந்திரா சர்மா மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த மனுவுக்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி, 'இது பொருளாதார கொள்கை சார்ந்த விஷயம். புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே திரும்ப பெறுவதாக அறிவித்துள் ளோம் என்று தெரிவித்தது. இந்த வழக்கு விசாரணை மே மாதம் 30-ந்தேதி முடிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தீர்ப்பு வழங்கப்பட்டது. ரூ.2 ஆயிரம் நோட்டு திரும்ப பெறும் ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு எதிரான பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.