இந்தியா

இல்லாத நோயாளிகளுக்கு பரிசோதனை: சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்த டெல்லி துணைநிலை ஆளுநர்

Published On 2024-01-04 06:22 GMT   |   Update On 2024-01-04 06:22 GMT
  • டெல்லி துணைநிலை ஆளுநர் ஏற்கனவே இரண்டு மோசடி தொடர்பான குற்றச்சாட்டி விசாரிக்க உத்தரவு.
  • தற்போது மேலும் ஒரு மோசடி தொடர்பாக விசாரணை நடத்த பரிந்துரை செய்துள்ளார்.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் யாருக்கு அதிகாரம் என்பதில் ஆம் ஆத்மி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையில் மோதல் இருந்து கொண்டே வருகிறது.

இந்த மோதல் உச்சநீதிமன்றம் வரை சென்றது. உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு வெற்றி பெற்றாலும், மத்திய அரசு பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றி மாநில அரசின் அதிகாரத்தை குறைத்தது. இதற்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் அனைத்து கட்சிகளை ஒன்று திரட்டி எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பலன் கிடைக்கவில்லை.

தற்போது டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் ஆம் ஆத்மியின் தலைவர்கள் சிக்கியுள்ளனர். அமலாக்கத்துறையால் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட தலைவர்கள் சிறைக்கு சென்றுள்ளனர். தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குறிவைக்கப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

இதற்கிடையே பல்வேறு துறைகளில் ஊழல் நடந்ததாக துணைநிலை ஆளுநர் சிபிஐ விசாரணைக்கு பரிந்து செய்து வருகிறார். மேலும், சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் வழங்கி வருகிறார்.

இந்த நிலையில்தான் ஆம் ஆத்மியின் மோஹல்லா கிளினிக்கில் இல்லாத நோயாளிகளுக்கு போலி ஆய்வக பரிசோதனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நோயாளிகளை குறிக்க போலி மற்றும் நடைமுறையில் இல்லாத மொபைல் எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பரிந்துரை செய்துள்ளதாக, துணைநிலை ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் போலி மருந்து வழக்கு, காடு மற்றும் வனவிலங்கு துறை தொடர்பான மோசடி குறித்து விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News