அக்னிபத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்களுக்கு பணி நிறைவுக்கு பின் மாற்று வேலை- மத்திய அரசு ஆலோசனை
- தகவல் தொடர்புத் துறையின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பு.
- தொலை தகவல் தொடர்பு சேவைகளில் வீரர்களை பயன்படுத்துவது குறித்து விவாதம்.
மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அக்னிபத் திட்டத்தின் கீழ், ராணுவத்தில் பணி புரியும் வீரர்களுக்கு நான்காண்டு பணி நிறைவுக்கு பின்னர் வேறு பணி வழங்குவது குறித்து மத்திய தகவல் தொடர்புத்துறை சார்பில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தொலை தகவல் தொடர்பு சேவை வழங்கும் ஏர்டெல், பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன்- ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், தகவல் தொடர்புத் துறையின் மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் பணியாற்ற உள்ள வீரர்களின் திறமை, கட்டுப்பாடு, தொழில்திறன்கள் ஆகியவற்றை தகவல் தொடர்புத்துறையில் குறிப்பாக தொலை தகவல் தொடர்பு சேவைகளில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த வழிமுறைகள் பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கண்ணாடி இழை பராமரிப்பு, குளிர்சாதனங்கள் பராமரிப்பு, கடைக்கோடிக்கு தொடர்பளிக்கும் அடிப்படைக் கட்டமைப்பு வழங்குதல், வீடுகளுக்கு கண்ணாடி இழை அமைத்தல் போன்ற வேலைவாய்ப்புக்குரிய பகுதிகள் இந்த விவாதத்தின் போது கண்டறியப்பட்டதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.