இந்தியா

உடனே நாடு திரும்ப வேண்டும்: பேரன் பிரஜ்வலுக்கு எச்சரிக்கை விடுத்த தேவகவுடா

Published On 2024-05-23 11:30 GMT   |   Update On 2024-05-23 11:30 GMT
  • வீடியோ வெளியானதும் தூதரக பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு ஓடிவிட்டார்.
  • அவரை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதல் மந்திரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான பாலியல் வீடியோ வெளியாகி கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பல பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைத்து கர்நாடகா மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோ வெளியானதும் தூதரக பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு ஓடிவிட்டார். அவரை இந்தியா கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதல் மந்திரி சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ்வல் ரேவண்ணா எங்கிருந்தாலும் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என அவரது தாத்தாவும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேவகவுடா, எனது பொறுமைக்கும் எல்லை உண்டு. சட்ட ரீதியிலான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும். பிரஜ்வல் ரேவண்ணா மீது தவறு இருப்பது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டாம்.

பொதுமக்கள் என்னையும், என் குடும்பத்தையும் திட்டித் தீர்க்கிறார்கள். எல்லாம் என் கவனத்திற்கு வந்தது. எனவே எங்கிருந்தாலும் நாடு திரும்பவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News