ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சபரிமலையில் திரண்ட பக்தர்கள்
- அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு பணிக்காக கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
- பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தேவசம்போர்டு செய்திருக்கிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஒவ்வெரு ஆண்டும் மண்டல மறறும் மகரவிளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு மண்டல பூஜை கடந்த 27-ந்தேதி முடிவடைந்து கோவில் நடை சாத்தப்பட்டது.
மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 30-ந்தேதி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்காக பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மண்டல பூஜை காலத்தில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்ததால் பல நாட்கள் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அதே போன்று மகரவிளக்கு பூஜை காலத்தில் நெரிசல் ஏற்படாமல் இருக்க பல்வேறு முன்னேற்பாடுகளை தேவசம்போர்டு செய்திருக்கிறது. அதன்படி பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு பணிக்காக கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்கள் பக்தர்களை சன்னிதானத்துக்கு செல்ல ஒழுங்குபடுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் திரண்டனர். இதற்காக நேற்று முதலே பக்தர்கள் அதிகளவில் வரத் தொடங்கினர். இதனால் இன்று பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும்ம பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
பலமணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி சரிதனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தேவசம்போர்டு செய்திருக்கிறது.