புத்தாண்டையொட்டி திருப்பதியில் பக்தர்கள் குவிந்தனர்- வி.ஐ.பி.க்கள் வருகையால் இலவச தரிசனம் தாமதம்
- திருப்பதியில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வி.ஐ.பி.க்கள் தரிசனத்திற்கு வந்தனர்.
- நேரம் ஒதுக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டதால் ஒரு சில வி.ஐ.பி.க்கள் தேவஸ்தான அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருப்பதி:
ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி திருப்பதியில் கோவில் முழுவதும் வண்ண மின்விளக்குகள், மலர்கள், பழங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் ஏழுமலையான் கோவில் முழுவதும் மின்னொளியில் ஜொலித்தது.
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். புத்தாண்டு பிறப்பையொட்டி நள்ளிரவில் கோவில் முன்பு கோலாட்டம் ஆடி பக்தர்கள் அசத்தினர்.
ஜம்மு-காஷ்மீர் கவர்னர், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சினிமா நடிகர், நடிகைகள் என ஏராளமான வி.ஐ.பி.க்கள் தரிசனத்திற்கு வந்தனர்.
ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வி.ஐ.பி.க்கள் தரிசனத்திற்கு வந்ததால் தேவஸ்தான அதிகாரிகளால் அவர்களுக்கு உண்டான நேர ஒதுக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால் ஒரு சில வி.ஐ.பி.க்கள் தேவஸ்தான அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு தரிசன நேரம் ஒதுக்கீடு செய்து அனுப்பியதால் இலவச தரிசன பக்தர்கள் தரிசனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.