இந்தியா
null

ஆந்திரா கிருஷ்ணா நதிக்கரையில் வைரங்களை தேடி படையெடுக்கும் மக்கள்

Published On 2024-05-27 10:39 GMT   |   Update On 2024-05-27 11:57 GMT
  • கிராமத்தின் ஒரு மறைவான பகுதியில் கோவில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
  • சில குடும்பங்கள் இரவு நேரங்களிலும் தொடர்ந்து வைரங்களை தேடி வருகின்றனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், என்.டி.ஆர் மாவட்டம், சந்தர்லபாடு அருகே உள்ள கிருஷ்ணா நதிக்கரையில் வைர கற்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது.

வைரக் கற்களை எடுப்பதற்காக தெலுங்கானா மாநிலம் உள்பட ஆந்திராவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிமெட்லா வந்து திறந்த வெளியில் கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர்.

கிருஷ்ண தேவராயர்கள், காகத்தியர்கள் மற்றும் நிஜாம்களின் ஆட்சியின் போது ஒரு காலத்தில் இந்த பகுதி நகரமாக இருந்துள்ளது.

இந்த பகுதி அதிர்ஷ்டம் மற்றும் மர்மம் நிறைந்த பகுதியாக உள்ளது. மேலும் கிராமத்தின் ஒரு மறைவான பகுதியில் கோவில் இருப்பதாகவும் கூறுகின்றனர். கடந்த ஆகஸ்டு மாதம் குண்டூர் மாவட்டம் சட்டெனப்பள்ளி நகரை சேர்ந்த 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள ஆறுமுகம் கொண்ட வைரக்கல் கிடைத்தது.

ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையின் ஆரம்ப கட்டங்களில் இப்பகுதியில் வைரம் தேடுவதற்காக பொதுமக்கள் வருகை தருவது வாடிக்கையாகி வருகிறது.

நிஜாம் ஆட்சியில் இருந்து தொடங்கி இந்த கிராமத்தில் வைரங்கள் மற்றும் விலை உயர்ந்த கற்கள் கிடைப்பது பிரபலமானது. இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியதால் மழைக்காலங்களில் அதிகமான மக்கள் கிராமத்திற்கு வருகை தருகின்றனர். வைரங்களை வாங்க வியாபாரிகள் இந்த கிராமத்திற்கு படையெடுத்து வருகின்றனர். ஒவ்வொரு மழைக்காலத்திலும் வயல்வெளிகள் மற்றும் திறந்த வெளிகளில் மக்கள் வைரங்களை தேடுவதற்கு அலை மோதுகின்றனர். அவர்கள் காலை முதல் மாலை வரையும் வைர வேட்டையில் ஈடுபடுகின்றனர். சில குடும்பங்கள் இரவு நேரங்களிலும் தொடர்ந்து வைரங்களை தேடி வருகின்றனர். வைரங்களை கண்டுபிடிப்பதற்காக மக்கள் அப்பகுதியில் மண்ணைத் தோண்டி சல்லடை போட்டு சளித்து கிடைக்கும் கற்களை பத்திரமாக சேகரிக்கின்றனர்.

தெலுங்கானா மாநிலம் ஜமலாபுரத்தை சேர்ந்த ரங்கா ரெட்டி என்பவர் கூறுகையில்:-

நான் சமீபத்தில் இந்த செய்தியை அறிந்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் 6 மணி நேரத்திற்கும் மேலாக மண்ணை தோண்டி பார்த்தேன். ஆனால் எனக்கு வைரகற்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றார்.

Tags:    

Similar News