இந்தியா

கேதார்நாத் புனித யாத்திரையில் விபரீதம்.. அந்தரத்தில் சுழன்ற ஹெலிகாப்டர்.. வீடியோ வைரல்!

Published On 2024-05-24 07:36 GMT   |   Update On 2024-05-24 10:31 GMT
  • கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி மற்றும் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு வருடந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
  • பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், யாத்ரீகர்கள் அனைவரும் பதிவு செய்வதை உத்தரகாண்ட் அரசு கட்டாயமாக்கியுள்ளது.

கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு வருடந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த சார்தாம் புனித யாத்திரையானது யமுனோத்ரியிலிருந்து தொடங்கி, கங்கோத்ரி, கேதார்நாத் வழியாகச் சென்று இறுதியாக பத்ரிநாத்தில் முடிவடைகிறது.

 

இந்த பயணம் பொதுவாக ஏப்ரல்-மே முதல் அக்டோபர்-நவம்பர் வரை மேற்கொள்ளப்படும். இந்த இடங்களுக்கு மிகவும் ஆபத்தான வழிகளிலும் மோசமான வானிலையிலும் பயணம் செய்ய வேண்டி உள்ளதால் சார்தாம் புனித யாத்திரை மிகுந்த கட்டுப்பாடுகளுடன் கடந்த மே 10 அன்று தொடங்கியது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், யாத்ரீகர்கள் அனைவரும் பதிவு செய்வதை உத்தரகாண்ட் அரசு கட்டாயமாக்கியுள்ளது.

இந்நிலையில் இன்று (மே 24) பக்தர்களை கேதார்நாத்துக்கு ஏற்றி வந்த ஹெலிகாப்டர் ஒன்று அந்தரத்தில் நிலைதடுமாறி சுழன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிர்சி ஹெலிபேடில் இருந்து கேதார்நாத் தாமுக்கு விமானியுடன் 6 பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த கெஸ்ட்ரல் ஏவியேஷன் கோ நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக காலை 7.05 மணி அளவில் கேதார்நாத் தாம் ஹெலிபேடுக்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்ததால் சுமார் 100 மீட்டர் முன்னதாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஹெலிகாப்டரில் இருந்த 6 பயணிகளும் விமானியும் பத்திரமாக உள்ளனர். இந்நிலையில் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல் அந்தரத்தில் சுழலும் வீடியோ வெளியாகியுள்ளது. ஹெலிபேடில் நின்றுகொண்டிருந்த நபர்கள் மீது மோதுவதுபோல் ஹெலிகாப்டர் மிகவும் அருகில் வந்ததால் அவர்கள் அங்கிருந்து பயத்தில் ஓடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. 

 

Tags:    

Similar News