வயநாடு நிலச்சரிவு- உயிர் பிழைத்தவர்களுக்கு ரூ.6 ஆயிரம் மாத வாடகை ஒதுக்கீடு
- முகாம்களில் உள்ளவர்களில் ஆண்கள் 571 பேர், பெண்கள் 566 பேர், குழந்தைகள் 368 பேர் ஆவர்.
- மாநில பேரிடர்மேலாண்மை துறை வெளியிட்டுள்ள உத்தரவில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்ட நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருக்கின்றனர். அவர்களை தேடும் பணி 16-வது நாளாக இன்று நீடிக்கிறது.
கண்டுபிடிக்காமல் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை தேடும் பணியில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த விரிவான தேடுதல் பணி கடந்த 9-ந்தேதி முதல் நடந்து வருகிறது.
சூரல்மலை பகுதியில் நேற்று பிற்பகலில் கனமழை கொட்டியது. இதனால் சாலியாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ராணுவ வீரர்கள் அமைத்திருந்த தற்காலிக தரைப்பாலம் மூழ்கியது.
இதனால் அந்த வழியாக மீட்பு குழுவினர் செல்ல முடியவில்லை. வெள்ளம் தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் செல்ல ராணுவவீரர்கள் அமைத்திருந்த பெய்லி பாலம் மூடப்பட்டது. இந்த மழையால் தேடுதல் பணி பாதிக்கப்பட்டது.
வயநாடு நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை மறுகுடிய மர்த்தும் பணிகளை அரசு தொடங்கியிருக்கிறது. அதற்கான முதற்கட்ட பணிகளை அரசு தொடங்கி உள்ளது.
நிலச்சரிவில் சிக்கி பலியான பலரது உடல்கள் சிதைந்து உருக்குலைந்த நிலையிலும், பலரது உடல்கள் துண்டுதுண்டாகிய நிலையிலும் மீட்கப்பட்டதால் பலியான பலரை அடையாளம் காண முடியவில்லை. இதனால் அந்த உடல்கள் மற்றும் உடல் பாகங்களை அடையாளம் காண டி.என்.ஏ. பரி சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தநிலையில் நேற்று அந்த பணி நடைபெற்றது. அடையாளம் காணப்படாத 401 உடல்கள்-உடல் உறுப்புகளுக்கான டி.என்.ஏ. பரிசோதனை நிறைவடைந்தது. இதுகுறித்து கேரள மாநில வருவாய்த் துறை மந்திரி ராஜன் கூறிய தாவது:-
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்கப்பட்ட 401 உடல்கள்-உடல் பாகங்களின் டி.என்.ஏ. பரிசோதனை நிறைவடைந்துள்ளது. 52 உடல் உறுப்புகள் மிகவும் சிதைந்துள்ளதால் அவை கூடுதல் பரிசோதனை செய்யவேண்டும். மீதமுள்ள 349 பேரில் 194 உடல் உறுப்புகள் வெவ்வேறு நபர்களுடையது.
மீதமுள்ள உடல் உறுப்புகள் 54 நபர்களுடையது என்பது சோதனையில் தெரிய வந்துள்ளது. டி.என்.ஏ. சோதனைகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட 248 உடல் உறுப்புகள் 121 ஆண்களுக்கும், 127 பெண்களுக்கும் சொந்தமானது.
நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்களில் 1,505 பேர் 12 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் உள்ளவர்களில் ஆண்கள் 571 பேர், பெண்கள் 566 பேர், குழந்தைகள் 368 பேர் ஆவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிலச்சரிவில் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளவர்களை வாடகை வீடுகளுக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு வாடகை வீட்டிற்கு செல்பவர்களுக்கு மாத வாடகையாக ரூ6ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
உறவினர்களின் வீடுகளுக்கு மாறுபவர்களுக்கும் மாதம் ரூ.6 ஆயிரம் வாடகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர்மேலாண்மை துறை வெளியிட்டுள்ள உத்தரவில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.