அடிக்கடி கட்சி மாறாதீர்கள்: இளம் அரசியல்வாதிகளுக்கு வெங்கையா நாயுடு அட்வைஸ்
- இளம் அரசியல்வாதிகள் அரசியலில் சேருங்கள். ஆக்கப்பூர்வமாக இருங்கள்.
- ஆனால் அடிக்கடி கட்சி மாறாதீர்கள் என முன்னாள் துணை ஜனாதிபதி தெரிவித்தார்.
மும்பை:
எம்.ஐ.டி அரசுப் பள்ளி மற்றும் எம்.ஐ.டி உலக அமைதிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய 13-வது பாரதிய சத்ர சன்சாத் தொடக்க விழாவில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
இளம் அரசியல்வாதிகள், மாணவர்கள் அரசியலில் சேருங்கள். அதில் ஆக்கப்பூர்வமாகவும், கவனத்துடனும் இருங்கள். ஆனால் அடிக்கடி கட்சி மாறாதீர்கள்.
இப்போதெல்லாம் யார் எந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதே கடினமாக இருக்கிறது. நாடு முழுவதும் சென்று சில நபர்கள் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் கட்சியைக் கூறுகிறேன். அங்கிருக்கும் மற்றவர்கள், நீங்கள் குறிப்பிடும் நபர் தற்போது அந்தக் கட்சியில் இல்லை என என்னிடம் திருத்திக் கூறுகின்றனர். ஜனநாயகத்துக்கே இது வெட்கக்கேடானது.
கட்சி தலைவர் ஆணவமாகவோ, சர்வாதிகாரியாகவோ மாறினால் கட்சிக்குள் விவாதித்து முடிவு எடுங்கள். அதுவே வழி. இல்லை என்றால் அரசியலின் மீதான மரியாதையை மக்கள் இழக்க நேரிடும். எம்.எல்.ஏ.க்கள் அடிக்கடி கட்சி மாறினால் மக்கள் அரசியல் ஆர்வத்தையும் இழக்க நேரிடும். அது ஜனநாயகத்துக்கு கேடாகவும் அமைந்துவிடும். எம்.எல்.ஏ.க்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என தெரிவித்தார்.