இந்தியா

டொமினிக் மார்ட்டின் 

குழந்தைகளுக்கான பொம்மை தயாரிப்பதற்கு எனக்கூறி ரிமோட்டுகளை வாங்கிய டொமினிக் மார்ட்டின்

Published On 2023-11-01 06:33 GMT   |   Update On 2023-11-01 06:33 GMT
  • தனது மீது யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக பல கடைகளில் பொருட்களை பிரித்து வாங்கி சென்றிருக்கிறார்.
  • குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களில் 16 பேர் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் உள்ள ஜம்ரா என்கிற சர்வதேச மாநாட்டு மையத்தில் யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபையினரின் பிரார்த்தனை கூட்டத்தில் கடந்த 29-ந்தேதி குண்டுகள் வெடித்தன.

இந்த குண்டுவெடிப்பில் இரிங்கோல் பகுதியை சேர்ந்த லியோனா பவுலோஸ்(வயது45), இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியை சேர்ந்த குமாரி(53), லிபினா என்ற 12 வயது சிறுமி ஆகிய 3 பேர் பலியாகினர். கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் வெடிகுண்டுகள் வெடித்த சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பதட்டம் ஏற்பட்டது.

இந்தநிலையில் குண்டு வெடிப்பு நடந்து முடிந்த சிறிது நேரத்திலேயே, குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக கூறி கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டார். மேலும் அவர் கொடகரா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவ சபையில் ஊழியராக பணிபுரிந்ததாகவும், அந்த சபையின் நடவடிக்கை பிடிக்காததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிலிருந்து வெளியே வந்து விட்டதாகவும், அந்த சபையினர் தங்களின் செயல்பாட்டை நிறுத்தாததால், அவர்கள் நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் திட்டமிட்டு வெடிகுண்டுகளை வைத்து வெடிக்க செய்ததாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது உபா சட்டம், கொலை, கொலை முயற்சி, வெடிமருந்து தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டினிடம் போலீசார் மட்டுமின்றி, என்.ஐ.ஏ., மத்திய பாதுகாப்பு படை, பயங்கரவாத எதிர்ப்பு படை உள்ளிட்டவைகளை சேர்ந்த அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.

அப்போது வெடிகுண்டுகளை தயாரித்தது எப்படி? அதற்கான மூலப்பொருட்களை எங்கே வாங்கினார்?, வெடிகுண்டுகளை திட்டமிட்டு வெடிக்கச் செய்தது எப்படி? உள்ளிட்டவைகள் தொடர்பான பல்வேறு தகவல்களை தெரிவித்தார். மேலும் குண்டுவெடிப்பு சதியை நிறைவேற்றியது தொடர்பாக தனது செல்போனில் பதிவு செய்திருந்த வீடியோ காட்சிகளையும் காண்பித்தார்.

அதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், குண்டுவெடிப்பு சதியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து டொமினிக் மார்ட்டினிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை திரட்டுவதற்காக டொமினிக் அந்தோணியை அவரது வீடு, குண்டுவெடிப்பு நடந்த மையம், குண்டுகள் தயாரிக்க மூலப்பொருட்கள் வாங்கிய இடங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பிரார்த்தனை கூட்டத்தில் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்ய டொமினிக் மார்ட்டின் ரிமோட் கண்ட்ரோலையே பயன்படுத்தி உள்ளார். வெடிகுண்டுகளை தனது வீட்டு மாடியில் வைத்தே யாருக்கும் தெரியாமல் தயாரித்திருக்கிறார்.

அதற்கான 4 ரிமோட் மற்றும் வயர் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் மூலப்பொருட்களை, எர்ணாகுளம் பகுதியில் உள்ள கடைகளில் வாங்கியிருக்கிறார். அப்போது அவர் குழந்தைகளுக்கு பொம்மை தயாரிப்பதற்கு தேவை என்று கூறி எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்கியுள்ளார்.

தனது மீது யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக பல கடைகளில் பொருட்களை பிரித்து வாங்கி சென்றிருக்கிறார். அதேபோன்று பெட்ரோலையும் பல பங்க்களுக்கு சென்று வாங்கியுள்ளார். அதனை வைத்து வெடிகுண்டுகளை தயாரித்து பையில் வைத்து வீட்டிலிருந்து வெளியே எடுத்துச்சென்று குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருக்கிறார்.

பின்பு லாட்ஜில் அறை எடுத்து குண்டுவெடிப்பு சம்பவத்தை நிறைவேற்றியதாக வெளியிட்ட வீடியோவை அங்கு வைத்து எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். அதன்பிறகே போலீஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்திருக்கிறார்.

மேற்கண்ட தகவல்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. டொமினிக் மார்ட்டினின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கிருந்து எலெக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட சில தடயங்கள் கிடைத்தன.

விசாரணைக்கு பிறகு டொமினிக் மார்ட்டினை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களில் 16 பேர் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News