இந்தியா

நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதால் நிலைகுலையும் பூமியின் சுழற்சி: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

Published On 2023-06-20 05:36 GMT   |   Update On 2023-06-20 05:36 GMT
  • 80 சென்டிமீட்டர் அளவுக்கு கிழக்குப் பகுதியில் சாய்ந்து உள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
  • நிலத்தடி நீரை மறு பகிர்வு செய்வதே இந்த பூமியின் சாய்வுக்கான முதன்மை காரணியாக கண்டறிந்துள்ளனர்.

புதுடெல்லி:

மனிதர்கள் நிலத்துக்கு அடியில் இருக்கும் தண்ணீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி வெளியேற்றி வருவதன் காரணமாக பூமி 1993 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 80 சென்டிமீட்டர் அளவுக்கு கிழக்குப் பகுதியில் சாய்ந்து உள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்க புவியியல் ஒன்றியத்தின் நாளிதழான ஜியோ பிஸிக்கல் ரிசர்ச் லெட்டர்சில் வெளியாகி உள்ள ஆய்வு முடிவுகள் இதனைத் தெரிவித்துள்ளது. மேற்கண்ட கால கட்டத்தில் மக்கள் 2,150 ஜிகாடன் நிலத்தடி நீரை 6 மில்லி மீட்டர் (0.24 அங்குலம்) கடல் மட்டத்திற்கு சமமாக உயர்த்தி உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த காலங்களில் துருவங்களின் சறுக்கல் கடல் நீரோட்டங்கள் மற்றும் பூமிக்கு அடியில் ஆழமான வெப்பமான பாறைகளின் வெப்ப சலனம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் மட்டுமே மேற்கண்ட மாற்றங்கள் ஏற்பட்டது. ஆனால் புதிய ஆராய்ச்சி முடிவுகள் நிலத்தடி நீரை மறு பகிர்வு செய்வதே இந்த பூமியின் சாய்வுக்கான முதன்மை காரணியாக கண்டறிந்துள்ளனர்.

மேலும் பூமியின் சுழற்சி துருவம் உண்மையில் நிறைய மாறுதல்களை கண்டுள்ளது என ஆய்வுக்கு தலைமை தாங்கிய சியோல் தேசிய பல்கலைக்கழகத்தின் புவி இயற்பியலாளர் கி. வியோன் சியோ தெரிவித்துள்ளார். இதனை ஆய்வில் ஈடுபடாத ஜெட் பிரபல்சன் ஆய்வகத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானி சுரேந்தரும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இவ்வாறு நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சியதால் ஏற்பட்ட மாற்றங்களால் பருவங்கள் மாறும் அபாயம் இல்லை. அதே வேளையில் புவியியல் நேர அளவீடுகளில் துருவ சறுக்கல் காலநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை தொடர்பான காரணங்களில் நிலத்தடி நீரின் பகிர்வு உண்மையில் பூமி சுழற்சி சறுக்கலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளதாக விஞ்ஞானி சியோ கூறியுள்ளார். மேலும் மத்திய அட்சரேகையில் இருந்து தண்ணீரை மறு பகிர்வு செய்வது துருவ சறுக்கலை கணிசமாக பாதிக்கிறது.

பெரும்பாலான மறு பகிர்வு வட அமெரிக்கா மற்றும் வடமேற்கு இந்திய பகுதியில் நிகழ்ந்துள்ளது. இந்த இரண்டு பகுதிகளும் மத்திய அட்சரேகைகளில் அமைந்துள்ளன. பூமியின் சுழற்சியை மாற்றுவதில் நீரின் பங்கு இருப்பதாக கடந்த 2016-ல் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் இப்போது வரை அதன் சறுக்கல்களுக்கான நிலத்தடி நீரின் பங்களிப்பு குறித்து ஆய்வு செய்யப்படவில்லை. இதுவே முதன் முறை என தெரிவித்துள் ளனர்.

ஆனால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதை தடுக்க பல நாடுகள் பல்வேறு திட்டங்களை தீட்டுவதன் மூலம் பூமியின் சுழற்சி மாற்றத்தை மீண்டும் மாற்ற இயலும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதன் பிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் இதழில் வெளியிடப்பட்ட 2021 ஆய்வில், 1995-ம் ஆண்டில் துருவ சறுக்கலின் திசை தெற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்தது. அதே போன்று 1995-2020 வரையிலான சராசரி சாய்வின் வேகம் 1981-95 காலகட்டத்தை ஒப்பிடும்போது 17 மடங்கு வேகமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

கடந்த 50 ஆண்டுகளில் மனிதர்கள் நீர் நிலைகளில் இருந்து 18 ட்ரில்லியன் டன் தண்ணீரை மாற்றாமல் பிரித்தெடுத்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News