இந்தியா

காஷ்மீர்,அரியானா தேர்தல் முடிவுக்கு பிறகு மராட்டியம், ஜார்க்கண்ட் தேர்தல்-தேர்தல் ஆணையம்

Published On 2024-08-18 07:11 GMT   |   Update On 2024-08-18 07:11 GMT
  • காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
  • அக்டோபர் 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை.

புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீர், அரியானா, மராட்டியம், ஜார்க்கண்ட் ஆகிய 4 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சட்ட சபை தேர்தலை நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டது.

இதற்கிடையே ஜம்மு-காஷ்மீர், அரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

காஷ்மீரில் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

இதேபோல அரியானா சட்டசபைக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 1-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 3-ந்தேதியுடன் அங்கு சட்டசபை பதவி காலம் முடிவடைகிறது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 4-ந்தேதி நடக்கிறது.

இந்த தேர்தலோடு மராட்டியம் மாநிலத்துக்கான தேர்தல் தேதியை அறிவிக்காததால் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தன.

இந்த நிலையில் காஷ்மீர், அரியானா மாநிலங்களுக்கான தேர்தல் முடிவு வெளியான பிறகே மராட்டியம், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப் படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடை பெறுகிறது. அதன் பிறகு தான் மராட்டியம், ஜார்க்கண்ட் மாநிலங்க ளுக்கான சட்டசபை தேர்தல் தேதி வெளியாகும்.

மராட்டிய மாநில சட்ட சபையின் பதவி காலம் நவம்பர் 26-ந்தேதியும் , ஜார்க்கண்ட் மாநில சட்ட சபையின் பதவிகாலம் ஜனவரி 5-ந்தேதியும் முடிவடைகிறது.

மராட்டிய மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்துக்கும் மராட்டிய தேர்தலோடு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News