மழை பெய்தால்தான் இனி தமிழகத்துக்கு காவிரி தண்ணீர்
- அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பது உள்ளிட்டவை குறித்து கர்நாடகம் கூறியது.
- கர்நாடகம் தரப்பில் தமிழகத்தின் வாதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
புதுடெல்லி:
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 96-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலி வழியாக நடை பெற்றது.
அப்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, ஜூன் மாதம் திறந்துவிடப்பட வேண்டிய தண்ணீர் 9.1 டி.எம்.சி. இது உள்பட மொத்தம் 16.6 டி.எம்.சி. தண்ணீரை ஜூன் மாதத்தில் பிலிகுண்டுலுவில் வழங்க வேண்டும். இதை வழங்கும்படி கர்நாடகத்துக்கு முறையாக உத்தரவிட வேண்டும் என தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக, வரும் ஜூன் 12-ந்தேதிக்கு பின்னர் தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி தொடங்கும் நிலையில், தமிழக அரசு சார்பில் இந்தக் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஆனால், கர்நாடகம் தரப்பில் தமிழகத்தின் வாதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
தற்போது அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பது உள்ளிட்டவை குறித்து கர்நாடகம் கூறியது. அதே சமயம், பருவமழை பெய்து நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து கர்நாடக அணைகளுக்கு தண்ணீர் வந்தால் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க முடியும் எனவும் கர்நாடகம் கூறியது.
இதைத் தொடர்ந்து, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினீத் குப்தா நிலைமை குறித்து விளக்கினார்.
அப்போது அவர் கூறு கையில், 'வருகிற தென் மேற்குப் பருவமழை இயல்பைவிட அதிகமாகப் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 700 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்து வரும் மழையால் பிலிகுண்டுலுவில் கடந்த சில நாட்களாக வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. இது கடந்த 15-ந்தேதி 1,100 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேலும், தற்போது இரு மாநிலங்களின் குடிநீர்த் தேவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். பயிர் சாகுபடி தொடங்கப்படாத நிலையில், தற்போதைய நிலை தொடரும். இருப்பினும், வருகிற 21-ந்தேதி நடைபெறும் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டில் பிலுகுண்டுலுவில் வழங்கப்படாமல் இருக்கும் பற்றாக்குறை நீர் குறித்தும், கடந்த ஆண்டு நீர் கணக்கு குறித்தும் விவாதிக்கப்படும்' என்றார்.