மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டு: அடுத்த மாதம் அறிக்கை தாக்கல்
- பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் டுபே மற்றும், வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தொகாத்ராய் ஆகியோரிடம் நேற்று 3 மணி நேரம் விசாரணை
- மஹுவா மொய்த்ராவை தவிர மற்ற நபர்களிடம் விசாரணை வேண்டியதில்லை எனக் கூறியுள்ளது நெறிமுறைக்குழு
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா, பாராளுமன்றத்தில் அதானி குழுமத்திற்கு எதிராக கேள்வி கேட்பதற்காக தொழில் அதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றதாக, பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் டுபே மற்றும், வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தொகாத்ராய் ஆகியோர் குற்றம்சாட்டியிருந்தனர். மத்திய அரசியலில் இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பாராளுமன்ற நெறிமுறைக்குழு விசாரணை நடத்தி வருகிறது. நேற்று பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் டுபே மற்றும், வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தொகாத்ராய் ஆகிய இருவரிடம் சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தியது.
இந்த நிலையில் மத்திய தொழில்நுட்பத்துறை, உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது பாராளுமன்ற நெறிமுறைக்குழு. அதில் மஹுமா மொய்த்ராவின் பாராளுமன்ற மக்களவையின் லாக்கின் தொடர்பான விவரத்தை கேட்டுள்ளது.
மேலும், துபாயில் இருந்து தயாரிக்கப்பட்ட தர்ஷன் ஹிராநந்தனியின் பிரமாண பத்திரம் அங்கீகரிக்கப்பட்டதா? என்பது குறித்து தகவல் அளிக்கும்படி வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
மஹுவா மொய்த்ராவைத் தவிர மற்ற யாரிடமும் விசாரைணை நடத்த வேண்டிய தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையை அடுத்த மாதம் சமர்ப்பிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.