பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேனா? தேவகவுடா அளித்த பளீச் பதில்
- பேசுவதற்கு என்னிடம் வலிமை உள்ளது.
- பிரதமர் மோடி என்ன சொல்கிறாரோ அதை கேட்போம்.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகவுடா கருத்து தெரிவித்து உள்ளார். 90 வயதானவரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான தேவகவுடா பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், பிராசாரத்தில் மட்டும் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், "நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எனக்கு 90 வயதாகிறது. எங்களுக்கு எத்தனை தொகுதிகள் கிடைத்தாலும், எங்கெல்லாம் தேவையோ, நான் அங்கு நிச்சயம் செல்வேன். பேசுவதற்கு என்னிடம் வலிமை உள்ளது. மேலும் எனக்கு நினைவு திறனும் எஞ்சியுள்ளது. இதை கொண்டு நான் பிரசாரத்தில் ஈடுபடுவேன்," என தெரிவித்தார்.
தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை தெளிவுப்படுத்திய தேவகவுடா ஹெச்.டி. குமாரசாமி தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, அவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி என்ன சொல்கிறாரோ அதை கேட்போம் என்று தெரிவித்தார்.
மேலும் ஜனவரி 22-ம் தேதி நடைபெற இருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் தான் தனது மனைவியுடன் கலந்து கொள்ள இருப்பதாகவும் தேவகவுடா தெரிவித்து இருக்கிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது.