இந்தியா

போலி வீடியோக்கள் தயாரிப்பதை தடுப்பது எப்படி?: சமூக ஊடக நிர்வாகிகளுடன் ஆலோசிக்க மத்திய அரசு முடிவு

Published On 2023-11-20 03:39 GMT   |   Update On 2023-11-20 03:39 GMT
  • ‘டீப்பேக்’ விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சமீபத்தில் சமூக ஊடக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
  • ‘டீப்பேக்’ படங்கள், வீடியோக்களை அகற்றுவதற்கும் சமூக ஊடகங்கள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்படும்.

புதுடெல்லி:

புகைப்படம், வீடியோ, ஆடியோவை அச்சு அசலாக போலியாக உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், 'டீப்பேக்'. இதன் மூலம் ஒருவரின் புகைப்படம், வீடியோவில் மற்றொருவரின் உருவத்தை ஏற்றி, நிஜம் போல உருவாக்க முடியும். ஆடியோவையும் மாற்ற முடியும்.

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப், கஜோல் போன்ற பிரபல நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் உருவாக்கப்பட்டது, மிகுந்த சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.

இந்த தொழில்நுட்பமானது சமூகத்தில் பெரும் நெருக்கடியையும், அதிருப்தியையும் உருவாக்கலாம். இது தவறாக பயன்படுத்தக்கூடிய அபாயம் குறித்த விழிப்புணர்வை ஊடகங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியும் வலியுறுத்தியிருந்தார்.

இந்தநிலையில் இவ்விவகாரம் தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

போலியாக வீடியோ, ஆடியோவை உருவாக்கும் 'டீப்பேக்' விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சமீபத்தில் சமூக ஊடக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி அந்த நிறுவனங்களும் நடவடிக்கை எடுத்துள்ளன. ஆனால் 'டீப்பேக்' விஷயத்தில் இன்னும் தீவிரமான நடவடிக்கையை சமூக ஊடகங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

எனவே அடுத்த 3, 4 நாட்களில், சமூக ஊடக நிர்வாகிகளுடன் நாங்கள் கூட்டம் நடத்தவிருக்கிறோம். அதில் 'டீப்பேக்' தொடர்பாக விரிவாக விளக்கப்பட்டு, அதை தடுப்பதற்கும், 'டீப்பேக்' படங்கள், வீடியோக்களை அகற்றுவதற்கும் சமூக ஊடகங்கள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்படும். மெட்டா, கூகுள் போன்ற நிறுவனங்களும் அதில் அடங்கும்.

'டீப்பேக்' படங்கள், வீடியோக்கள், ஆடியோக்களை அகற்றாத சமூக ஊடகங்கள், தங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவின் கீழ் பாதுகாப்பு பெற முடியாது.'

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News