5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி பாராளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி
- ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களில் திரண்டனர்.
- டெல்லி எம்.சி.ஆர். பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
புதிய வேளாண் சட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, சலுகைகள் வழங்க வேண்டும், நிலமற்ற விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் மறுவாழ்வு பலன்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் இன்று விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
நொய்டாவில் உள்ள மகாமாயா மேம்பால பகுதியில் இருந்து டெல்லி பாராளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி பிற்பகல் தொடங்குகிறது. பாரதீய கிஸான் பரிசத் அமைப்பு, கிசான் மஸ்தூர் மோர்ச்சா மற்றும் சம்யுக்த் கிசான் மோர்ச்சா உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.
இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக கவுதம் புத்தநகர், அலிகார் மற்றும் ஆக்ரா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரகணக்கான விவசாயிகள் டிராக்டர்களில் திரண்டனர்.
விவசாயிகள் போராட்டத்தையொட்டி டெல்லி எம்.சி.ஆர். பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து பல்வேறு இடங்களில் மாற்றி விடப்பட்டுள்ளது.
முக்கிய சாலைகளில் சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.