தனது கார் நிறுவனத்தை விமர்சித்த நபருக்கு நறுக் பதில் கொடுத்த ஆனந்த் மஹிந்திரா
- மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் குறித்து சுஷாந்த் மேத்தா தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
- 20 ஆண்டுகளுக்கு பிறகும், நாங்கள் இன்னும் கடுமையாகப் போட்டியிடுகிறோம் என்று ஆனந்த் மஹிந்திரா பதில்
மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள், அதன் வடிவமைப்புகள் மற்றும் ஊழியர்களை விமர்சித்து சுஷாந்த் மேத்தா என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "மஹிந்திரா நிறுவனத்தில் ஏற்கனவே உள்ள கார்கள், சர்வீஸ் சென்டர்கள், உதிரிப் பாகங்கள் பிரச்சனைகள், பணியாளர்களின் நடத்தைகள் போன்றவற்றில் உள்ள பிரச்சனைகளை முதலில் சரிசெய்யுங்கள்.
உங்கள் கார்களின் தோற்றம் ஹூண்டாய் காரின் அழகின் அருகில் கூட வரவில்லை. உங்களது டிசைன் டீம் அல்லது உங்களுக்கே இவ்வளவு மோசமான ரசனை இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. மஹிந்திராவும் டாடாவும் உலகிற்கு புதிய மாருதி மற்றும் ஹூண்டாய் ஆக முடியும் என்று நான் தீவிரமாக நம்புகிறேன் மற்றும் விரும்புகிறேன் ஆனால் இதுவரை ஏமாற்றம்தான்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில் ஸ்க்ரீன்ஷாட்டை ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து சுஷாந்த் மேத்தாவிற்கு பதில் அளித்துள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா தனது பதிவில், சரியாகச் சொன்னீர்கள் சுஷாந்த். நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் தான். ஆனால் நாங்கள் எவ்வளவு தூரம் வந்துள்ளோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
நான் 1991 இல் நிறுவனத்தில் சேர்ந்தேன். ஒரு உலகளாவிய ஆலோசனை நிறுவனம் கார் வணிகத்தை விட்டு வெளியேறுமாறு எங்களுக்கு கடுமையாக அறிவுறுத்தியது. ஏனெனில் வெளிநாட்டு பிராண்டுகளுடன் போட்டியிட எங்களுக்கு வாய்ப்பு இல்லை என்று அவர்கள் கருதினார்கள்.
20 ஆண்டுகளுக்கு பிறகும், நாங்கள் இன்னும் கடுமையாகப் போட்டியிடுகிறோம். வெற்றி பெறுவதற்கான எங்கள் பசியைத் தூண்டுவதற்கு உங்கள் பதிவை போலவே எங்களை சுற்றியுள்ள இழிவான தன்மை, சந்தேகம், முரட்டுத்தன்மையை பயன்படுத்தியுள்ளோம்
ஆம், நாங்கள் இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டும். அதற்குள் எந்த மனநிறைவுக்கும் எங்களிடம் இடமில்லை, தொடர்ச்சியான முன்னேற்றம் நமது மந்திரமாகத் தொடரும். ஆனால் அதே சமயம் எங்கள் வயிற்றில் நெருப்பை ஊட்டியதற்கு நன்றி" என்று பதில் அளித்துள்ளார்.