மும்பையில் ஐந்து நாட்கள் தண்ணீர் விநியோகம் குறைப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்
- தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
- குடிநீரை கவனமாக கையாள வேண்டும்.
மும்பையில் இன்று துவங்கி டிசம்பர் 5 ஆம் தேதி வரை குடிநீர் விநியோகம் பத்து சதவீதம் குறைக்கப்படுகிறது. ஏற்கனவே மும்பை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பின் படி குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. நீர் மேலாண்மை அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
நேற்று (நவம்பர் 30) குடிநீர் விநியோக அமைப்பின் பாகங்களில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக அதனை சரி செய்ய வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. அதன்படி தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணிகள் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 2 ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தானே மற்றும் பிவாண்டி பகுதிகளுக்கு வழக்கத்தை விட 10 சதவீதம் நீர் விநியோகம் குறைக்கப்படுகிறது.
குடிநீர் விநியோகத்தை குறைப்பதன் மூலம் தொழில்நுட்ப கோளாறை விரைந்து சரி செய்ய முடியும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொது மக்கள் குடிநீரை கவனமாக கையாள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு காரணமாக மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் குடியிருப்பு மற்றும் தொழிற்பேட்டை பகுதிகளில் நீர் விநியோகம் பாதிகப்படும். தானே மற்றும் பிவாண்டி பகுதிகளிலும் நீர் விநியோகம் குறைக்கப்படுகிறது.