நீதிபதி மீது பெண் நீதிபதி பாலியல் புகார்: தற்கொலை செய்ய அனுமதி கேட்டு எழுதிய கடிதத்தால் பரபரப்பு
- மாவட்ட நீதிபதியால் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், அதனால் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- இனி எனக்கு வாழ விருப்பம் இல்லை. கடந்த ஒன்றரை வருடங்களில் நான் நடை பிணமாக மாற்றப்பட்டேன்.
புதுடெல்லி:
உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் பெண் சிவில் நீதிபதி ஒருவர் சக மாவட்ட நீதிபதி மீது பாலியல் புகார் கூறியுள்ளார். அவர் பாரபங்கியில் பதவியில் இருந்தபோது மாவட்ட நீதிபதியால் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், அதனால் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி கடந்த ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நிர்வாக நீதிபதியிடம் புகார் அளித்தும், இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவர் தற்கொலை செய்ய அனுமதி கேட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார். இது உத்தரபிரதேசத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு அவர் எழுதிய 2 பக்க கடிதத்தில் "இனி எனக்கு வாழ விருப்பம் இல்லை. கடந்த ஒன்றரை வருடங்களில் நான் நடை பிணமாக மாற்றப்பட்டேன். இந்த ஆன்மாவும் உயிரும் இல்லாத உடலைச் சுமந்து செல்வதில் எந்த நோக்கமும் இல்லை. என் வாழ்க்கையில் எந்த நோக்கமும் இல்லை. எனது வாழ்க்கையை கண்ணியமான முறையில் முடிக்க தயவுசெய்து என்னை அனுமதிக்கவும், "என்று குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை நிலுவையில் இருந்தபோது மாவட்ட நீதிபதியை இடமாற்றம் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும். ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது என்றும் அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், தான் கடந்த காலத்தில் தற்கொலைக்கு முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தலைமை நீதிபதிக்கு பெண் நீதிபதி எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அவர் மாவட்ட நீதிபதிக்கு எதிராக எழுப்பிய பாலியல் புகார்கள் மீதான விசாரணையின் நிலை குறித்து அலகாபாத் உயர் நீதிமன்ற நிர்வாகத்திடம் இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் அறிக்கை கேட்டுள்ளார்.