சினிமா மோகத்தால் வந்த சிக்கல்: ஆந்திராவில் மிரட்டி பணம் பறித்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
- சினிமா ஆசை, பெண் இன்ஸ்பெக்டரை சிறையில் தள்ளிவிட்டது.
- ஸ்வர்ணலதா‘ஏபி 31’ என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார்.
விசாகப்பட்டினம் :
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் கொல்லி ஸ்ரீனு, ஸ்ரீதர்.
இவர்கள் தங்களிடம் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 10 சதவீத கமிஷன் அடிப்படையில் மாற்ற திட்டமிட்டுள்ளனர். அதற்காக அந்த நோட்டுகளை சூரிபாபு என்ற இடைத்தரகரிடம் கொடுத்தனர்.
பணத்தை மாற்றிய சூரிபாபு, ரூ.90 லட்ச ரூபாய்க்கு ரூ.500 நோட்டு கட்டுகளை எடுத்துக்கொண்டு விசாகப்பட்டினம் கடற்கரை சாலையில் காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது அங்கு ஆந்திர ஆயுதப்படை போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர் ஸ்வர்ணலதா, ஊர்க்காவல் படையினருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
சூரிபாபுவின் காரையும் சோதனையிட்ட அவர், அதில் ஒரு பையில் கட்டுக்கட்டாக ரூ.500 நோட்டு கட்டுகள் இருப்பதைக் கண்டார். அதுகுறித்து ஸ்வர்ணலதா விசாரித்தபோது, சூரிபாபு திக்கி திணறியுள்ளார்.
அதையடுத்து ஸ்வர்ணலதா, தனக்கு ரூ.20 லட்சத்தை கொடுத்துவிட்டு மீதி பணத்தை எடுத்துச் செல்லும்படியும், இல்லாவிட்டால், ஆவணமின்றி கொண்டு செல்வதாக மொத்த பணத்தையும் பறிமுதல் செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது
பெண் இன்ஸ்பெக்டருடன் பேரம் பேசிய சூரிபாபு, கடைசியில் ரூ.12 லட்சத்தை அவருக்கு கொடுத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை கொல்லி ஸ்ரீனு, ஸ்ரீதரிடம் கொண்டு போய் கொடுத்துள்ளார்.
அதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் விக்ரமாவிடம் புகார் அளித்தனர். அதையடுத்து அவரது உத்தரவின்பேரில் பெண் இன்ஸ்பெக்டர் ஸ்வர்ணலதா, இடைத்தரகர் சூரிபாபு, ஊர்க்காவல் படையினர் இருவர் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண் இன்ஸ்பெக்டர் ஸ்வர்ணலதா, சினிமா மோகத்தில் இந்த சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பதாக தெரிகிறது. அவர், பிரபலமான தெலுங்கு சினிமா பாடல்களுக்கு நடனமாடி 'யூடியூப்'பில் பதிவேற்றி வந்தார். அவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில், ஸ்வர்ணலதாவை சந்தித்த ஒருவர், 'உங்கள் அழகுக்கு நீங்கள் சினிமாவில் நடித்தால் 'ஓகோ' என்று வருவீர்கள்' என்று கூறினாராம்.
அதையடுத்து சினிமா கனவில் மிதந்த ஸ்வர்ணலதா, அதை தானே நிறைவேற்றும் வகையில் 'ஏபி 31' என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார். அதில் கதாநாயகியாகவும் அவரே நடிக்கிறாராம்.
சினிமா தயாரிப்புக்கு நிறைய பணம் தேவை என்பதால் மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். சினிமா ஆசை, பெண் இன்ஸ்பெக்டரை சிறையில் தள்ளிவிட்டது.